செய்திகள்

காஷ்மீரில் உயிர்தப்பிய 68 மதுரைக்காரர்கள் - அதிர்ச்சியில் ஒருவருக்கு நெஞ்சுவலி!

Staff Writer

காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 68 பேர் குழு சிறிது நேர இடைவெளியில் உயிர்தப்பிய தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை மாவட்டத்திலிருந்து குழுவாக ஒரு தரப்பினர் சுற்றுலா சென்றனர். நேற்று பெகல்காம் குட்டி சுவிட்சர்லாந்து பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், தமிழ்நாட்டிலிருந்து சென்ற 31 வயது டாக்டர் பரமேஸ்வர் என்பவருக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. 83 வயது சண்டனோ என்பவர் சுயநினைவின்றிக் கிடக்கிறார். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மதுரையைச் சேர்ந்த குழுவினர் பெகல்காமிலிருந்து ஏபிசி எனும் இடத்துக்குப் போய்விட்டு மதிய உணவுக்குப் பிறகு, குட்டி சுவிட்சர்லாந்துக்குச் செல்வதாக இருந்தனர். அவர்கள் அங்கு போவதற்கு முன்னரே கொடூர சம்பவம் நிகழ்ந்துவிட்டதால், அந்தத் தகவலை அவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கும் விடுதியிலேயே இருந்தனர்.

அப்போது, சந்துரு என்பவருக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் உடனடியாக அருகில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மற்ற அனைவரையும் இன்று மாலை 6 மணிக்கும், 7 மணிக்கும் என இரு குழுக்களாக ஸ்ரீநகரிலிருந்து விமானத்தில் புறப்பட்டு தில்லி வழியாக தமிழகத்துக்கு வருகின்றனர்.