செய்திகள்

குழந்தைகளைப் பாதுகாக்க பெண்கள் சென்னையில் பேரணி!

Staff Writer

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்துநிறுத்தக் கோரியும் அவர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி சென்னையில் இன்று பேரணி நடத்தப்பட்டது. 

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.

சென்னை, புதுப்பேட்டை பழைய சித்ரா திரையரங்கம் அருகே தொடங்கிய பேரணி கோட்டையை நோக்கிச் சென்றது. ஆனால் அண்ணா சாலைக்கு முன்னரே சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.  

பின்னர் அங்கு கூட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநில பொருளாளர் ஜி. பிரமிளா, மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டனர்.