செய்திகள்

கோத்தாரி காலணி நிறுவனத்துடன் ரூ.5000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!

Staff Writer

கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில், 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தித் திட்டங்களை நிறுவுவதற்கு எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

”இத்திட்டத்தை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால், இம்மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும்.” என அரசுத் தரப்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான மருத்துவர் தாரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன் குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ரஃபீக் அகமது, செயல் துணைத் தலைவர் பி. கார்த்திகேயன் ஆகியோருடன் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.