சென்னை, கீழ்பாக்கத்தில் சவுக்கு சங்கர் வசிக்கும் வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல் 
செய்திகள்

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுத் தாக்குதல் - எடப்பாடி, வைகோ, திருமா கண்டனம்!

Staff Writer

யூட்டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் ஒரு கும்பல் புகுந்து கழிவை ஊற்றி தாக்குதல் நடத்தியது. சங்கரின் தாயார் தனியாக இருக்கும்போது இன்று காலை 10 மணியளவில் இளைஞர் கும்பல் ஒன்று, துப்புரவுப் பணியாளர் சீருடையில் வந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், நா.த.க. தலைவர் சீமான், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி :

”சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.”

வைகோ :

”சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஒரு கும்பல் மனித கழிவு மற்றும் சாக்கடை நீரை ஊற்றி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது .

தூய்மைப் பணியாளர் போர்வையில் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மேற்கண்ட அராஜகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் இத்தகைய வீபரீதங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தின் அடித்தளம் செல்லரித்துப் போய்விடும்.

கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாத கோழைகள் இப்படி இழிவான செயலில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.”

இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அண்ணாமலை :

”திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்குசங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

தொல். திருமாவளவன் :

சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமெனச் சொல்லப்படுகிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தி.மு.க. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறோம்.”

சீமான் :

”சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமூக விரோதக் கும்பல் பட்டப்பகலில் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மனிதக் கழிவையும், சாக்கடையையும் வீடு முழுக்கக் கொட்டியதோடு, வீட்டை சூறையாடி, சங்கருக்கும், அவரது தாயாருக்கும் அச்சுறுத்தல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆளும் திமுக அரசுக்கு எதிரானக் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார் சங்கர் என்பதற்காகவே, அவரைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகப் பழிவாங்கும் போக்கு மிக மலினமான அரசியலாகும். அவர் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து, சிறைக்குள் தாக்குதல் தொடுத்து, கையை உடைத்து, இருமுறை குண்டர் சட்டத்தைப் பாய்ச்சிய திமுக அரசு, தற்போது அவரது வீட்டுக்குள் தாக்குதல் நடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும். மாற்றுக்கருத்து முன்வைப்பவர்களையும், அரசியலில் எதிர்முகாமைச் சேர்ந்தவர்களையும் எதிரியாகப் பாவித்து, அவர்கள் மீது அதிகாரத்தைக் கொண்டு மீது அடக்குமுறையை ஏவுவதும், சமூக விரோதிகளின் மூலம் அச்சுறுத்த முனைவதுமான இத்தகைய செயல்பாடுகள் வெளிப்படையான சனநாயகப் படுகொலையாகும்.

தம்பி சங்கர் தனது வீட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதை காவல்துறைக்குத் தெரிவித்தும்கூட அவர்களை உடனடியாகக் கைதுசெய்யாது வேடிக்கைபார்த்த செயல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சரிநிகர் சான்றாகும். ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி இல்லாமல், காவல்துறையின் துணையில்லாமல் இத்தகைய தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

எல்லோராலும் அறியப்பட்ட தம்பி சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கே இந்நிலையென்றால், பொது மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? வெட்கக்கேடு! எந்தத் திசை நோக்கினாலும் கொலை, கொள்ளை, வன்முறை வெறியாட்டம், கூலிப்படையினரின் அட்டூழியம், போதை வியாபாரிகளின் ஆதிக்கம் என தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் சீரழிந்துகிடக்கிற நிலையில், இப்போது நாடறியப்பட்ட ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டிருப்பதன் மூலம் இது தமிழ்நாடா? இல்லை! உத்தரப்பிரதேசமா? எனும் கேள்விதான் எழுகிறது.

நான்காண்டு கால ஆட்சி! நாற்றமெடுக்கும் நாசகார ஆட்சி!சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடைக்கழிவுகளே அதற்குச் சாட்சி!”

த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் :

”யூட்டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”