அன்புமணி  
செய்திகள்

சாதிக்கட்சிகளுடன் பா.ம.க. 20இல் ஆர்ப்பாட்டம்!

Staff Writer

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சாதிக்கட்சிகளுடன் சேர்ந்து பா.ம.க. ஒருங்கிணைப்பில் சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் என அன்புமணி அறிவித்துள்ளார்.  

”தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.” என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

”ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு சமூகமும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பில் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டம் வகுக்க வேண்டியது அவசியம். அத்தகைய திட்டத்தை வகுப்பதற்கு  தேவையான தரவுகளை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமாக மட்டும் தான் திரட்ட முடியும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


சமூகநீதியையும், சம நீதியையும் நிலை நிறுத்துவதற்கும், சமூகநீதியை பாதுகாப்பதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

”குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு மறுக்கிறது.

அண்டை மாநிலமான தெலுங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி, அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. ஆனால், இதை எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பா.ம.க., சமூகநீதிக் கூட்டமைப்புக் கட்சிகள் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றன.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

”பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே,மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இணைப் பொதுச்செயலாளர் தமிழரசன், தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன்,  வெள்ளாளர் முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா சரவணம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து இரமேஷ் , வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு  உட்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.” என்றும் பா.ம.க. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.