மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பிரச்சாரத்தை சென்னையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொடங்கிவைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. அதையொட்டி, மாநாட்டுக்கான பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது.
கம்யூனிசத் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் நினைவு தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சி கிளைகள்தோறும் மாநாட்டுக்கான பிரச்சாரத்தைக் கொண்டு செல்லும்வகையில் செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் ஒருபகுதியாக, சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கொடியேற்றி வைத்து பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி இந்த நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கினார். முன்னாள் எம்.பி.யும் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.ரங்கராஜன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், தி இண்டு பத்திரிகைக் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என்.இராம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், கே.சி.கோபிகுமார், தோ.வில்சன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.