செய்திகள்

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று மேல்முறையீடு

Staff Writer

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, எம்.பி., பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்ப்டடார். வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதன்படி, ராகுல் காந்தி இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, தனது தாயும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியாகாந்தியை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஹோட்டலில் ஒன்றரை மணிநேரத்துக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா-வும் உடனிருந்தார்.

சூரத் பகுதிக்கு இன்று காலை செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார். இதனிடையே, பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், வரும் 12-ம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.