செய்திகள்

செங்கோட்டையன் பற்றி கேள்வி- முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி!

Staff Writer

அ.தி.மு.க.வில் உட்கட்சி சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க.வில் இணைவதாகக் கூறப்படும் செங்கோட்டையன் பற்றிய கேள்வியால் பேட்டியை முடித்துக்கொண்டு நகர்ந்தார், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி. 

சட்டப்பேரவையில் இன்று காலையில் பேரவைத்தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததைப் பற்றி அவைக்கு வெளியே ஊடகத்தினரிடம் பழனிசாமி விவரித்தார். 

அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முனுசாமி பேசும்போது, பதில்கூற வேண்டிய அமைச்சருக்குப் பதிலாக அவைத்தலைவர் அப்பாவு வலிய பதில்கூறுகிறார் என்றும், 

ஆளும் கட்சிக்குச் சார்பான பதிலை நடுநிலைமையாக இருக்கவேண்டிய அவைத்தலைவர் சொல்கிறார் என்றும் பழனிசாமி சம்பவங்களுடன் விவரித்தார். 

மேலும் சில கேள்விகளுக்கு சிரித்தபடி பதில் அளித்த அவர், செங்கோட்டையன் இன்றும் அ.தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே எனக் கேட்டதற்கு, தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தான் முதலமைச்சராக வந்ததிலிருந்தே இப்படி அ.தி.மு.க.வுக்குள் ஒற்றுமையைக் குலைக்கப் பார்ப்பதாகவும் அவர் சொன்னார். அத்துடன் போதும்போதும் என்கிறபடி கையெடுத்துக் கும்பிடுவதைப்போல பேட்டியை முடித்துக்கொண்டு நகர்ந்தார்.