சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரை இன்று அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழ்நாடு அரசின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்ககளுக்கு பாதுகாப்பான, அடிப்படை வசதிகள் கொண்ட ஓய்வறைகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும், பாதுகாவலர்களையும் நியமிக்க வேண்டும் என்றும், அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு அதற்கான குழுக்களை அமைக்கவும் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விசாகா குழுக்களை அமைக்கவும் வெளிநாடுகளில் படித்த மருத்துவப் பட்டதாரி மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இச்சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். இரவீந்திரநாத், செயலாளர் ஏ.ஆர்.சாந்தி, கிருபா முதலிய மருத்துவ மாணவர் சங்க நிர்வாகிகள் இடம்பெற்றனர்.