செய்திகள்

டிரம்பின் பல்டிகளுக்கு சீனம் பதிலடி- பணிந்த அமெரிக்கா!

Staff Writer

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னுக்குப்பின் முரணான அட்டகாசங்களுக்கு இடையில் சீன முதலிய நாடுகள் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 84 சதவீத வரியை விதிக்க சீன அரசு முடிவுசெய்துள்ளது. 

அதையடுத்து, மற்ற நாடுகள் மீதான கூடுதல் வரியை அடுத்த 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

ஆனாலும் சீனத்தின் மீதான இறக்குமதி வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாகவும் அவர் நேற்று அறிவித்தார். 

முன்னதாக, அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர்தான் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். 

சீனத்தின் பதிலடி வரிவிதிப்பால் மேலும் கால் பங்கு வரியை உயர்த்தினார். 

மொத்த நாடுகளில் 75 நாடுகள் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஆனால் சீனம் மட்டும் தன்னுடைய நிர்வாகத்தின் முடிவை மதிக்கவில்லை என டிரம்ப் சீறியுள்ளார். 

இதனிடையே, உலக அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த நாட்டிலேயே பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் டிரம்பின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 20 பில்லியன் யூரோ அளவுக்கான சோயாபீன்ஸ், அலங்காரப் பொருட்கள், மோட்டார்சைக்கிள்கள் அடங்கிய அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கத் தீர்மானித்துள்ளன.