(மாதிரிப் படம்)
செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே போகிறது?

Staff Writer

கணவன், குழந்தை கண் எதிரில், கத்தி முனையில் இளம்பெண்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தையொட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருப்பூரில் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரின் கணவர், குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும்,  பதற்றமும் விலகுவதற்கு முன்னரே  திருப்பூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத் தடுத்துநிறுத்த வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்துவிட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும்  மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதிசெய்ய வேண்டியதுதான் அரசு, காவல்துறையின் பணி  என்பதையும், குற்றம்செய்தவர்களைக் கைதுசெய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம்தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பதுதான் தெரியவில்லை.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தவர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், “வெளி மாநிலத்தவர் அதிகம் பணிசெய்யும் திருப்பூர், சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரைக் கண்காணிக்கவும், சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை  எடுத்திருந்தால்  இந்தக் கொடுமை நடந்திருக்காது என்றும் கூறியுள்ளார். 

”தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்  நடமாடுவதை உறுதி செய்யவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.