தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயிகளின் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை நாய்கள் கடித்து விலைமதிப்புமிக்க கால்நடைகள் இறந்து வருகின்றன என்று பிரச்சினை எழுந்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
”தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டு இதுவரை மாநில அரசு வழங்கவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள், மாடுகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நாய்கள் கடித்து இறந்துள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியானதல்ல.” என அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
”நீதிமன்றத்தில் ப்ளுகிராஸ் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தெருநாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் உரிய சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தெருநாய்கள் பெருகியுள்ளது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
”குறிப்பாக, தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய ஆடுகளை, கன்றுகளை நாய்கள் பட்டிகளில் புகுந்து கடித்து கொல்கிற சம்பவம் திருப்பூர், ஈரோடு மாவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா சென்னிமலை அருகில் உள்ள ராமலிங்கபுரத்தில் ஒரு விவசாயின் 30 ஆடுகள் நாய்களால் கடித்து கொல்லப்பட்டுள்ளன. சிவன்மலை அருகில் 5 ஆடுகளும் தாராபுரத்தில் 5 ஆடுகளும் உயிரிழந்துவிட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து காங்கேயம் ஊத்துக்குளி, தாராபுரம் பல்லடம் வட்டங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவிலும் தெருநாய்கள் அட்டுழியம் தொடர் கதையாக உள்ளது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம்-பெருந்துறை மாநில நெடுஞ்சாலையில் பாரவலசு என்ற இடத்தில் 13.02.25 முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகளும், விவசாய குடும்ப பெண்களும் கடும் பணியிலும் தங்கியிருந்து நொய்யல் அருகில் நெடுஞ்சாலையில் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும், காங்கேயம், தாராபுரம் வட்டாட்சியர்களும் இழப்பீட்டுக்கான பரிந்துரைகள் அரசு அனுப்பப்படும் எனவும், நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆகவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.”என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.