இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை அமைச்சர் 
செய்திகள்

நாசம் செய்துவிட்டு தொப்புள்கொடி உறவு என்பதா?- இலங்கை அமைச்சர் சாடல்

Staff Writer

எங்கள் மீன்களைப் பிடிப்பது மட்டுமில்லாமல் எமது கடல் வளத்தையே இந்திய தமிழக மீனவர்கள் நாசம் செய்கின்றனர்; இதனால் அடுத்த தலைமுறையினருக்குரிய கடல் வளம் அழிக்கப்படுகிறது; எனவேதான், இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களைக் கேட்டுகொள்வதாக இலங்கை கடல் தொழில் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார். 

இலங்கை, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் கூறிய அவர், ” அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டே, எங்களைத் தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை.” என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

”இதே சமயம், தமிழக மீனவர்கள் மீதோ, தமிழகத் தலைவர்கள் மீதோ எமக்கு எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லை. சில மீனவர்கள்தான் இழுவைப் படகுகள் மூலம் தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எங்கள் கடல் வளத்தை நாசமாக்குகின்றனர். அதையே எதிர்க்கிறோம்.

எங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் யாரையும் கைதுசெய்ய வேண்டிய தேவை இல்லை. எனவே, இப்போது போராட்டம் நடத்துகின்ற தமிழக மீனவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என்றுதான். அவர்கள் எல்லை தாண்டாவிட்டால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.” என்றும் இலங்கை அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.