‘குடியைவிடவும் இளையராஜாவின் இசை மிகப்பெரிய போதை’ என பாட்டல் ராதா படத்தின் விழாவில் மிஷ்கின் பேசிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பாட்டல் ராதா படத்தின் விழா நேற்று நடந்தது. இதில் வெற்றிமாறன், லிங்குசாமி,மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய மிஷ்கின், "நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து குடிப்பவன். ஆனால் ஒருபோதும் அந்த மது என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கிடையாது.
நான் உதவி இயக்குநராக இருந்தபோது குடிப்பதற்காக செல்வேன். கைகளில் இரண்டு கொசுவர்த்திகளுடன் செல்வேன். ஏனெனில் குடிக்க ஆரம்பித்தால் சினிமா பேசுவோம். அதேபோல் இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தோ எனக்கு ஒரு பாட்டில் வந்துவிடும். முக்கியமாக இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்ப புள்ளி. இந்த போதைகளைவிடவும் இளையராஜா மிகப்பெரிய போதை. இந்தப் படம் குடிக்கு அடிக்ட் ஆன ஒருவனை எப்படி அதிலிருந்து மீட்க வேண்டும்; அவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை பேசுகிறது.
குடி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. குடி இல்லாத நாடே இல்லை. சாராயம் காய்ச்சும் அளவுக்கு குடியில் எனக்கு அனுபவம் இருக்கிறது.
கண்டிப்பாக பாட்டல் ராதா படம் பெரும் நம்பிக்கையை கொடுக்கும். சோமசுந்தரம் இந்தப் படத்தில் அப்படி நடித்திருக்கிறார். அதேபோல் ஜமா இயக்குநர் பாரி இளவழகனும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.