செய்திகள்

திடீர் நிபந்தனையால் அண்ணாமலை, நயினாருக்கு வாய்ப்பு இல்லை!?

Staff Writer

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளால் திடீர்ப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவி, பொதுக்குழு உறுப்பினர் உட்பட்ட பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக மாநிலத் துணைத்தலைவர் சக்ரவர்த்தி செயல்படுவார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத் தலைவர் பதவிக்கு 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரமாக அடுத்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு இருக்கும் எனப் பேசப்பட்டுவந்தது. ஆனால் அவர் அ.தி.மு.க.விலிருந்து இக்கட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளே ஆகின்றன என்பதால், இந்த விதி அவருக்கு பாதகமாக அமைந்துள்ளது.

மேலும், தற்போதைய தலைவர் அண்ணாமலையும் வெளிப்படையாக பா.ஜ.க. உறுப்பினராக இவ்வளவு காலம் இருந்ததில்லை; 2020 ஆகஸ்ட்டில்தான் அவர் பா.ஜ.க.வுக்கு வந்தவர் என்பதால், அவருக்கும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா நாளை சென்னைக்கு வந்து சங் பரிவார் பிரமுகர் பிரபல ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசிக்க உள்ளநிலையில், அண்ணாமலை அவரைச் சந்தித்துப் பேசினார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள குருமூர்த்தியின் வீட்டில் இன்று பிற்பகல் அண்ணாமலை ஒரு மணி நேரம் அவருடன் பேசினார்.

பா.ஜ.க.வில் நடைபெற்றுவரும் இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.