சிபிஐ முத்தரசன் - ஆளுநர் ஆர்.என். ரவி 
செய்திகள்

நெல்லையில் ஆளுநர் விசமத்தனம் - முத்தரசன் கண்டனம்!

Staff Writer

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் நோக்கத்துடன் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

” “மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது, மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.” ஆளுநரின் இந்தக் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு கடைப்பிடித்து வரும் இரு மொழிக் கொள்கையால் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை, பல துறைகளிலும் முன்னேறி முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

சர்வதேச அளவில் நவீன தகவல் தொழில் நுட்பத் துறையில் சுந்தர் பிச்சை, பன்னாட்டு குழும நிறுவனமான பெப்சி கம்பெனியின் முதன்மை செயல் அலுவலராக இந்திரா நூயி, இஸ்ரோ தலைவர் முனைவர் வி.நாராயணன் இப்படி ஏராளமான பெயர்களை பட்டியலிட முடியும். இவை பற்றிய தகவல்கள் பெறுவதில் ஆளுநர் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மற்ற எந்த மொழிகள் மீதும் வெறுப்புக் காட்டுவதில்லை, யார் எந்த மொழியை, எத்தனை மொழிகளை கற்க விரும்பினாலும், அதனை தடுப்பதும் இல்லை. தமிழ்நாட்டில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மொழிகளையும் கற்று வருகிறார்கள் என்பதை ஆளுநர் அறிந்து கொள்ள வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்தி, அதனை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. புதிய தேசியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியை நகர்த்தி விட்டு, இந்தி மொழியை திணிக்கும் நோக்கத்தை உள்ளடக்கி இருப்பதை ஆளுநர் மூடி மறைத்து பேசி வருகிறார். இந்தி படித்தால் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகளில் பயனடையலாம் என்ற புனைவு தகவலை வெளியிடும் ஆளுநர், நாடு முழுவதும் 15-29 வயது இளைஞர்களில்

10 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையின்மை வேதனை தீயில் வெந்து மடிந்து வருவதை மறைக்க விரும்புகிறார்.

ஆளுநருக்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளை மறந்து விட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவகராகவே செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியின் விஷமத்தனமான பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.” என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.