செய்திகள்

பார்த்தது பொய், படம் பொய்யெனப் பேசக்கூடாது - சீமான் சிரிப்பு பதில்!

Staff Writer

பெரியாரை இழிவுபடுத்திப் பேசியது தொடர்பாக நா.த.க. தலைவர் சீமான் மீது பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இன்று மூன்றாவதாக ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சீமானின் வீட்டில் விசாரணைக்கான அழைப்பாணையை நேரில் அளித்தனர். 

அதைப் பெற்றுக்கொண்ட சீமான், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். 

ஏற்கெனவே, வடலூர், இராணிப்பேட்டை ஆகிய காவல்நிலையத்தினர் சீமானுக்கு அழைப்பு அனுப்பியிருந்ததைச் சுட்டிக்காட்டி கேட்டதற்கு, எல்லா இடங்களிலும் வழக்குப்போட்டு அலையவிட்டு மனச்சோர்வை உண்டாக்க அரசு நினைக்கிறது; எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்றார்.

மேலும், ”இதற்கெல்லாம் அச்சப்படுகிறவன் இந்தக் களத்துக்கு வரக்கூடாது; ஒரே காரணத்துக்காகப் போடப்பட்ட வழக்குகள் என்பதால் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்கச் சொல்லி நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம்; அதுவரை இப்படி அழைப்பாணை வந்தால் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்; நாளைக்கு காலையில் விக்கிரவாண்டிக்கு ஒரு வழக்குக்குப் போகவேண்டும், அடுத்து சேலத்துக்கு...  ஒரே நேரத்தி இரண்டுமூன்று வழக்குகள் என்றால் ஒரே ஆள்தானே இருக்கிறேன்; ஏஐ மூலம் நான்கைந்து ஆட்களையா உருவாக்கி அனுப்பமுடியும்? என்னால்தான் அவர்களுக்கு நெருக்கடி; அவர்களால் நா.த.க.வுக்கு என்ன நெருக்கடி? யாரைப் பார்த்து யார் பயப்படுகிறார்கள்? அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த அதிகாரம் நிலையானது என நினைப்பதுதான் சிரிப்பாக இருக்கிறது; நாம்தான் என நினைக்கும் திமிரால் போடும் ஆட்டம்தான்; எதையும் எதிர்கொள்வோம்.” என்றும் சீமான் கூறினார்.  

தொடர்ந்து பெரியார் குறித்து பேசுவதால்தான் நா.த.க.விலிருந்து பலரும் வெளியேறுகிறார்களா எனக் கேட்டதற்கு, “பெரியாருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதற்கு முன்னரே போய்க்கொண்டிருக்கிறார்கள். பெரியாரைநான் இகழ்ந்துபேசியதாகச் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. அவர் பேசியதை எடுத்துப் பேசுகிறோம். பெரியாரைக் கொண்டாடநினைப்பவர்கள் பெரியாரைப் புகழ்ந்து பேசவேண்டியதுதானே? பெரியார் பற்றிய என் பேச்சை மறுக்கவேண்டும் அல்லது அதைப் பற்றி விளக்கம் அளிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறு பேசக்கூடாது. பார்த்தது பொய், படம் பொய்யெனப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அது பொய், இது பொய் எனப் பேசக்கூடாது.” என்று சீமான் விவரித்தார்.