(மாதிரிப் படம்)
செய்திகள்

பாலியல் கொடுமை எதிர்ப்புப் போராட்டம் - மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாமின்!

Staff Writer

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட புகாரில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிந்தது. அதில் அவர்களுக்கு உயர்நீதிமன்றம் பிணை விடுவிப்பை வழங்கியுள்ளது. 

தரமணியில் உள்ள தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவி கடந்த மாதம் 25 அன்று பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் உரிய குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவியைக் கல்லூரியைவிட்டு நிர்வாகம் அனுப்பிவிட்டது என்றும் கூறி அதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரிக்கு சென்று போராட்டம் நடத்தினர். ஜனநாயக மாதர் சங்கத்தினரும் அவர்களுடன் இணைந்துகொண்டனர். 

அப்போது முதலில் காவல்துறையினரும் பின்னர் மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவர் சங்கத் தலைவர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர்களுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.