செய்திகள்

பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்- மோடியின் தோல்வி: முத்தரசன்

Staff Writer

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியே வெளிப்படுத்துகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

”காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பெகல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இக்கொடூரச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய விழைகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து கொடுத்திட வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையையும் வழங்கிட வேண்டும்.

இந்திய அரசின் உளவுத்துறை மோடி ஆட்சியில் செயலிழந்து விட்டது.

இக் கொடூர நிகழ்விற்கு ஜம்மு - காஷ்மீர் தொடர்பான  ஒன்றிய அரசின் தவறான கொள்கையும், செயல்பாடுகளுமே அடிப்படைக் காரணம். 

இப்பயங்கரவாத தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

இந்தத் தாக்குதலின் பொழுது சுற்றுலா பயணிகளை  காப்பதில் குதிரை ஏற்ற பயிற்சியாளர் சையத் ஆதில் ஹுசைன் ஷா என்பவர் மிகப் பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். பலரைக் காப்பாற்றியுள்ளார். ஒரு பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் தன்னுடைய உயிரை இழத்துள்ளார் .

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அவருடைய இந்த வீர தீரச் செயலை மனமார பாராட்டுகிறது. அவரது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.