செய்திகள்

பெண் வக்கீலிடம் தவறாகக் கேட்ட போலீஸ்- மெரினா சம்பவ வீடியோ வாக்குவாதம்!

Staff Writer

சென்னை, மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திலகவதி என்பவர் நேற்று இரவு ஆண் ஒருவருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இராஜ்குமார் என்ற காவல்துறைக் காவலர் அவர்களிடம் அதிகார தொனியில் கேள்விகளைக் கேட்டார். 

இதுதொடர்பாக வழக்குரைஞர் திலகவதி வெளியிட்ட காணொலி, சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. 

1.28 நிமிடம் ஓடக்கூடிய அந்தக் காணொலியில், முதலில், “ எங்களை கணவன் - மனைவி என ஏன் சார் கேட்டீங்க?” என்று திலகவதி கேட்கிறார். 

அதற்குப் பதிலளிக்காத இராஜ்குமார், “நீங்க யாருனு கேட்டேன்.” என தன் போக்கில் பேசுகிறார். 

மீண்டும் தன் கேள்வியை திலகவதி கேட்க, அதற்கும் விடாமல் அந்த காவல் ஆளிநர், “பீச்சுக்குள்ள ஒண்ணைப் புரிஞ்சுக்கங்க.” எனச் சொல்லிக்கொண்டிருக்க, குறுக்கிட்ட திலகவதி, “என்ன புரிஞ்சிக்கணும். உங்களுக்கு என்ன தேவை இருக்கு? ரெண்டு பேர் உட்கார்ந்திருக்காங்கன்னா வந்து ஏன் கணவன், மனைவியானு கேக்குறீங்க?” எனக் கேட்டார்.

”யாருனு கேட்டேன்” என போலீஸ்காரர் சொல்ல, “அப்படிக் கேக்கலை. கணவன் மனைவியானு கேட்டீங்க. ஏன் அப்படிக் கேக்குறீங்க?” என வழக்குரைஞர் மடக்க, “என்ன முழுக்கச் சொல்லவிடுங்க..” என ஒருமாதிரியான இரங்கும் தோரணையிலும் சொல்கிறார். 

“ தனியா இருக்காங்களே, கணவன்மனைவியானு கேட்டேன். காதலர்களானு கேப்பேன். இல்லை, நண்பர்கள்னு சொன்னா...” என காவலர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “இப்படி கேட்கச்சொல்லி காவல்துறையில் சொல்லியிருக்காங்களா? கடற்கரையில ஒரு ஆணும் பொண்ணும் உட்காரக்கூடாதா? இப்படி உட்கார்ந்தா கணவன்மனைவியானு கேப்பீங்களா? அப்படி எதுவும் சட்டம் இருக்கா? அப்படி கேட்கக்கூடாது சார். கேக்குறது அநாகரிகமான விசயம். ஒரு பொண்ணும் பையனும் உட்கார்ந்திருந்தா இப்படிக் கேட்கிறதே அநாகரிகமான விசயம்.” என வழக்குரைஞர் சொல்லிக்கொண்டே இருக்க, இந்த முறை காவல் ஆளிநர் இராஜ்குமார் குறுக்கிட்டார். 

“உங்ககிட்ட நான் ஒரு பாடம் கத்துக்கிட்டேன். இப்படி யாராவது தனியா இருந்தாங்கன்னா எப்படி டீல் பண்றதுன்னு கத்துக்கொடுத்துட்டீங்க.” என்ற அவரிடம், “கடற்கரைல பொண்ணும் பையனும் உட்கார்ந்திருந்தா கணவன்மனைவியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. எப்படி நீங்க அப்படிக் கேட்கலாம்?” என வழக்குரைஞர் எகிறினார். 

பின்னர் உட்கார்ந்திருந்த வழக்குரைஞர் எழுந்து நகரமுயன்ற இராஜ்குமாரிடம், விடாமல் கேள்வியைத் தொடர்ந்தார். 

காவல் ஆளும் சட்டமாகப் பேசியவர், “ ஏன் இவ்வளவு நேரம் தனியாக இருந்தீங்க?” என மீண்டும் கேட்டார். 

கடற்கரையில இருக்கக்கூடாதா என திலகவதி கேட்க, அந்த காவல் ஆளிநரோ, இருட்டுக்குள்ள இருக்கக்கூடாது என அப்பட்டமாக பிளேட்டைத் திருப்பிப்போட்டார். 

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே வழக்குரைஞர் திலகவதி தன்னுடைய செல்போன் கேமராவை 360 டிகிரி திருப்ப, அந்த இடமே மாநகராட்சியின் விளக்கொளியில் நன்றாகத் தெரிந்தது. 

“ இது இருட்டா... என்ன பண்ணிகிட்டிருந்தாங்க, நீங்க பாத்தீங்க?” என மேலும் எகிற, பதில் ஏதும் சொல்லாமல், அவர்கள் கொடுத்த செல்போனைப் பார்த்தபடி அமைதியாக இருக்கிறார், காவல் ஆளிநர் இராஜ்குமார். 

வழக்குரைஞர் திலகவதியின் இந்தக் காணொலி முகநூலில் தீயாய்ப் பரவிய நிலையில், இன்று அந்தக் காவலர் இராஜ்குமாரை இடமாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.