முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

பொள்ளாச்சி... இதிலுமா உங்க ஸ்டிக்கர் ஸ்டாலின்? - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

Staff Writer

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், ”அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. அதனால்தான் இன்று நீதி கிடைத்துள்ளது.” என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகக் கூறியுள்ளார். 

முதலமைச்சரின் இன்றைய கருத்துக்குப் பதில் அளிக்கும்வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

”உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.

வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் M. K. Stalin!” என்றும் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

யார் வெட்கித் தலை குனிய வேண்டும் எனக் கேட்டுள்ள அவர்,

“அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!” என்று பதிலுக்குக் கூறியுள்ளார். 

”நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!” என்றும் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.