சட்டப்பேரவை 
செய்திகள்

போலீசில் புதிய உளவுப் பிரிவுகள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Staff Writer

பெருகிவரும் புதிய குற்றங்களைத் தடுக்கும்படியாக தலைநகர் சென்னையில் காவல்துறையில் புதிய உளவுப் பிரிவுகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 

காவல்துறை, தீயணைப்புத் துறை முதலிய துறைகள் அடங்கிய உள்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தை முன்னிட்டு, அவர் இன்று 102 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சில அறிவிப்புகள் விவரம் :

* சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப் பிரிவு (Organised Crime Cell)  உருவாக்குதல்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவிடும் வகையிலும், சென்னை பெருநகர காவல் எல்லையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றக் குழுக்கள் நிகழ்த்தக்கூடிய திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்திடவும், சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப் பிரிவு ரூபாய் 13 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

* சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (Anti Narcotics Intelligence Unit) உருவாக்குதல்

சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்கள், போதை பொருட்களின் நடமாட்டம், விற்பனை ஆகியவை குறித்து நுண்ணறிவு தகவல்களை திரட்டவும், கடத்தலில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கண்காணித்து போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாகவும், சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூபாய் 8 இலட்சம் செலவில்  உருவாக்கப்படும்.

* சென்னை பெருநகர காவலின் மத்திய குற்றப் பிரிவில் செயல்படும் இணையவழி குற்றப் பிரிவில் புதிதாக சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு (Social Media Investigation Unit) உருவாக்குதல்

மத்திய குற்றப் பிரிவின் (CCB) இணையவழி குற்றப் பிரிவானது, நிதி மற்றும் நிதி சாராத கணினி வழி குற்றங்களை கையாளுகிறது. சமூக ஊடகம் தொடர்பான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும், உண்மை கண்டறியும் பிரிவு மற்றும் தேசிய இணையவழி குற்ற புகார் இணைய முகப்பு ஆகிய பிரிவுகளிலிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து ஆட்சேபகரமான பதிவுகளை நீக்குவதற்காகவும், பதிவேற்றியவர் குறித்த தகவலை கண்டறிவது, வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பது போன்ற பணிகளை சமூக ஊடக தளங்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூபாய் 63 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.