செய்திகள்

மாதவிடாய் என சிறுமியைத் தனியாகத் தேர்வு எழுதவைத்து கொடுமை!

Staff Writer

எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மாதவிடாய் எனக் காரணம் கூறி, தனியாக வகுப்பறைக்கு வெளியே தேர்வை எழுதவைத்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் சொந்த ஊரான செங்குட்டபாளையத்தில் அவரின் சித்தப்பா பெயரில் உள்ள தனியார் பள்ளியில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டுவரும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளி எனும் தனியார் பள்ளியில் பட்டியல் சமூக மாணவி எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 5ஆம் தேதி இவர் பூப்படைந்துவிட்டார் என்றும் அதனால் அவரை வகுப்புக்குள் அனுமதிக்கமுடியாது என வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வை எழுத வைத்தனர்.

தகவல் அறிந்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட அவரின் தாயாரிடம், அப்படித்தான் செய்வோம்; வேண்டுமானால் வேறு பள்ளிக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என அங்கிருந்தவர்கள் முகத்திலடித்தாற்போல கூறிவிட்டனர்.

இந்நிலையில், மாணவியின் உறவினர் சார் ஆட்சியரிடம் இதைப் பற்றி புகார் அளித்தார்.

அதன்பேரில் சித்பவானந்தா பள்ளியில் முதல்வர் ஆனந்தியிடமும் கண்காணிப்பாளர் சிவகாமியிடமும் பொள்ளாச்சி காவல் உதவிக் கண்காணிப்பாளர் கிறிஸ்டி சிங் இன்று காலையில் விசாரணையில் ஈடுபட்டார்.

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வலுத்துவருகின்றன.