இலங்கையின் முன்னாள் அரசு அதிபர் மகிந்த இராஜபக்சேவின் தம்பி பசில் இராஜபக்சே, கடந்த தேர்தலில் போட்டியிடாமல் அமெரிக்காவுக்குப் போய்விட்டார். மகிந்தவின் மகன் நாமலைத் தவிர அந்தக் குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிடவே இல்லை.
நீண்ட காலமாக, இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்துவந்த இராஜபக்சே குடும்பம், புதியதாக இலங்கை பொது மக்கள் முன்னணி என்கிற புதிய கட்சியைத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பசில் இராஜபக்சேதான் அதன் நிறுவனர்.
தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அவர், விரைவில் நாடு திரும்புவார் என்றும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மகிந்த குடும்பக் கட்சியிலிருந்து விலகிச் சென்று கடந்த தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்களை அழைத்து மீண்டும் கட்சியை வலுப்படுத்தவும் இராஜபக்சே சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த இராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார்.