ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் 
செய்திகள்

‘ராமதாஸ் 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை’ – அன்புமணி

Staff Writer

ராமதாஸ் 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

எத்தனை முறை நானும், ஐயாவும் பார்த்தோம். நிச்சயமாக நான் செய்கிறேன் என்று பொய்யைச் சொன்னார் ஸ்டாலின். இந்த தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம். நாங்கள் எங்கள் புள்ளைக்கு படிப்பும், வேலையும் கேட்டோம். அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். அதை நடத்த ஸ்டாலினுக்கு அதிகாரம் உண்டு. பிகார், ஒடிசா, ஆந்திரா என பல மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது முடித்துவிட்டார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அதிகாரம் இல்லையா? இந்திய புள்ளி விவர சட்டத்தின் படி, பஞ்சாயத்து தலைவருக்கு அவரது பஞ்சாயத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. உங்களுக்கு கிடையாதா? எவ்வளவு காலம் பொய் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். சமூகநீதி பற்றி பேச தி.மு.க. வுக்கு தகுதியில்லை.

வன்னியர்களுக்கு எதிரானது தி.மு.க. ஒரு ஓட்டுக் கூட தி.மு.க.விற்கு விழக்கூடாது. தி.மு.க.விற்கும், சமூகநீதிக்கும் சம்பந்தம் இல்லை.

காந்தி இந்தியாவுக்கு வந்த 32 ஆண்டுகளில் விடுதலை கிடைத்தது. ராமதாஸ் 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. அவர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். நம்மை அடிமையாக வைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.