செய்திகள்

’ரூ’ பயன்படுத்திய நிர்மலா சீத்தாராமன் - தி.மு.க. எம்.பி. வில்சன் காட்டும் ஆதாரம்!

Staff Writer

ரூபாயின் குறியீடாக ரூ எழுத்தைத் தமிழக நிதிநிலை அறிக்கையில் பயன்படுத்தியது பிரிவினையைத் தூண்டுவது என மைய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடுமையாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும்படியாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் சற்று முன்னர் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவரின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பு: 

” தமிழ்நாடானது ரூபாயின் சின்னத்தை புறக்கணித்துவிட்டதாக பாஜக தலைவர்கள் பலரும் கூறுவதை பார்த்து வருகிறேன்.

'ரூ' என்ற எழுத்து எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாத தவறான ஊடக செய்திகளால் பரப்பப்பட்ட முற்றிலும் தவறான தகவல் இதுவாகும்.

ஆனால் தேர்தல் வரும் காலங்களில் மட்டும் தன்னை தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் – மற்ற நேரங்களில் தமிழை மறந்துவிடும் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் கூட, அவருடைய டெல்லி சகாக்களுக்கு, தமிழில் ரூபாய் என்று அழைப்பதன் முதல் வார்த்தைதான் “ரூ” என்பதை கற்பிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, சில ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் கூறுவது போல ரூபாயை தமிழ்நாடு புறக்கணித்துவிட்டது என்று சொல்ல முடியாது.

ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 25 இன் கீழ், ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, ரூபாய் நோட்டுகளில் கூட தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளில் Rupees என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பால் மனம் வெந்துபோன நாங்கள் இந்திக்கு பதிலாக தமிழ் வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மாறாக, நாங்கள் உண்மையிலேயே Rupees அல்லது Rupiah (இது சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டது) என்பதை புறந்தள்ள விரும்பியிருந்தால், ஆங்கிலேயர்கள் நம்மீது "ரூபாயை" திணிப்பதற்கு முன்பு சென்னையில் வழக்கிலிருந்த "காசு" என்ற தமிழ்ச் சொல்லுக்குத் திரும்ப வேண்டும் என்றுதான் வலியுறுத்தியிருப்போம். மேலும், ஆங்கிலத்தில் Cash என்பதே "காசு" எனும் தமிழ் மூலத்திலிருந்துதான் பெறப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

ஒன்றிய அரசு நமக்கு ஒரு ரூபாய் நிதி கூட வழங்காத நிலையிலும், தமிழ்நாடானது அனைத்து பொருளாதார குறியீடுகளிலும் முதலிடம் பிடித்துள்ளது என்கிற உண்மையிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பவே இது போன்ற வெற்றுக் கூச்சல் எழுப்பப்படுகிறது.

ரிசர்வ் வங்கியே ரூபாய் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறது என்பதை நினைவூட்ட மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சரிடம் ரூபாய் நோட்டைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒன்றிய அமைச்சர், தான் “ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வந்தவர்” என்று கூற மாட்டார்கள் என்று நம்புகிறேன்!

கடந்த 2017 காலகட்டத்தில் அவரே ரூபாய் சின்னமான ₹ க்கு பதிலாக “ரூ” என்றே பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன். இந்த ஆதாரத்தின் அடிப்படையில், அமைச்சர் வலதுசாரி அமைப்புகளால் “தேச விரோதி” என்று முத்திரை குத்தப்பட மாட்டார் என்றும் நம்புகிறேன்.” என வில்சனின் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.