சிறுசேரி சிப்காட் பூங்காவில் சிஃபி தரவு மையம்  
செய்திகள்

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் சிஃபி டேட்டா மையம் திறப்பு!

Staff Writer

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும்வகையில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்த மையத்தைத் திறந்துவைத்தார்.

”தமிழ்நாடு 2024-25ஆம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இது. அந்த வகையில், தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை, தரவு மைய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மைய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் 26.11.2021 அன்று தமிழ்நாடு தரவு மையக் கொள்கை வெளியிடப்பட்டது.

சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள், தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மைய உட்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள், பாதுகாப்பு தீர்வுகள் உட்பட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், 40 மெகாவாட் மின் ஆதரவு முதலிய பல்வேறு அம்சங்களுடன், அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது. 2027-ஆம் ஆண்டிற்குள், சென்னையில், 13,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.