புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  
செய்திகள்

ரூ.3 கோடியில் பாரதிதாசன் நினைவாக கோட்டக்குப்பத்தில் அரங்கம்!

Staff Writer

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  நினைவாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ”பாரதிதாசன் (1891-1964) அவர்கள் தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்பட்டார்.  அவர் “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969இல் சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர்.  அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில்
ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில்  புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின்
மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக
தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும்
உதவித் தொகை,

1. தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும்

2. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் 

3. எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இதற்கென தொடர் செலவினமாக ரூபாய்
3 கோடியே 90 இலட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்
வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை
100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும்.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும், “புதுதில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும்.   இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.” என்றும் அரசு அறிவித்துள்ளது.