குஜராத்தில் இன்று நிகழ்ந்த கோர விமான விபத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இலண்டனில் தங்கியுள்ள தன் மனைவியை அழைத்துவருவதற்காக அவர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். முதல் வகுப்பு இரண்டாம் வரிசையில் அவர் இருக்கையைப் பதிவுசெய்திருந்தார். அவருக்கு முன்னாள் இருந்த பயணி, ரூபானியுடன் சேர்ந்தாற்போல செல்பி எடுத்த படம் இணையத்தில் பரவியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் 11ஏ எண்ணிட்ட இருக்கையில் பயணித்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளார். 40 வயதான இவர், 20 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்துவருகிறார்.
மொத்தம் விமானத்தில் இருந்த 242 பேரில் இவர் ஒருவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீண்டுள்ளார்.
விமானத்தில் இவரின் மூத்த சகோதரர் அஜய்குமாரும் பயணம் செய்துள்ளார். அவருடன் டாமன் டையூ பகுதிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு பிரிட்டன் திரும்பும் வழியில் இப்படியொரு துயரம் நேர்ந்துள்ளது.
“ விமானம் புறப்பட்ட அரை நிமிடத்திலேயே பிரச்னை தொடங்கிவிட்டது. பெருஞ்சத்தம் கேட்டது. எல்லாமும் ஒரே வேகத்தில் முடிந்துவிட்டது. விழித்துப்பார்த்தால் சுற்றிலும் சடலங்கள். விமானத்தின் பாகங்கள்... எழுந்து ஓடத் தொடங்கினேன். என்னைப் பக்கவாட்டில் யாரோ பிடித்தபடி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள்.” என்கிறார் விஸ்வாஸ்குமார்.
அகமதாபாத் அசர்வா சிவில் மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர், வேறொரு இருக்கையில் அமர்ந்திருந்த தன்னுடைய அண்ணனைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, அந்த மருத்துவமனையில் இன்று, தங்களின் உறவுகளையும் அன்பானவர்களையும் இழந்த எத்தனையோ பேரின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது!