த.வெ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா என்பது தொடர்பாக விஜய்யிடம்தான் கேட்கவேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.
கரூரில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.
மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சீட் தராதபோதும் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளப்பட்டதா, அந்தக் கட்சி சதிசெய்துவிடட்தா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், முன்னர் எடப்பாடி பழனிசாமி கூறிய விளக்கத்தை பதிலாகச் சொன்னார், பிரேமலதா.
இதைப்போல, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தி.மு.க. பக்கம் சாய்வதைப் போலப் பேசிய அவர், இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்னைகளைப் பட்டியல் இட்டார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் மாவட்டத்தில் அதிகமான மணல்கொள்ளை நடப்பதாகவும், சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் செய்யப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் கரூர் மாவட்டத்தில் விற்கப்படுவதாகவும் பிரேமலதா குற்றஞ்சாட்டினார்.
பழைய பேருந்துநிலையத்தை மாற்றி புதிய இடத்தில் அமைத்ததை மக்கள் விரும்பவில்லை என்றும் பழைய பேருந்து நிலையத்தையே சீர்பட இயக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மதுரையில் பேசிய அமித்ஷா, தி.மு.க. ஆட்சியில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியதைப் பற்றியும் கேட்டதற்கு அவர் கருத்துக்கூறாமல் நழுவிவிட்டார்.