அரசியல்

தொடரும் 40 ஆண்டு கனவு!

Staff Writer

கடந்த ஏப்ரல் 16-17 தேதிகளில் நாடாளுமன்றம் பெரும் கொதிப்பிலும் பரபரப்பிலும் இருந்தது. மக்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவோடு இணைத்து மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த முயற்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நேரத்தில் கிடைத்த இந்த பிரச்னையை திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் டெல்லிக்கு எதிரான இன்னொரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டன. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மசோதா நகலை எரித்து எதிர்ப்பைக் காட்டினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 3 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் 2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மக்களவை இடங்களை 543இல் இருந்து 850 ஆக அதிகரிக்கும் நோக்கத்தி்லும் அறிமுகப்படுத்தப்பட்டன.

அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.

ஏப்ரல் 17, 2026 அன்று நடந்த வாக்கெடுப்பில், அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026 மக்களவையில் 2/3 பெரும்பான்மை பெறத் தவறியதால் தோல்வியடைந்தது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 298

எம்.பிக்கள் வாக்களித்தனர், எதிராக 230 எம்.பிக்கள் வாக்குகளித்தனர். அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு 362 எம்.பி.க்கள் ஆதரவு வாக்குகள் வேண்டும். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமாகவும், மத்திய மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாக திமுக முதலிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது இந்த மசோதாவை நிறைவேற்றி அதற்கான பெருமை அங்கீகாரத்தை எதிர்க்கட்சியினரே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

தொகுதி மறுவரையறை / சீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற எதிர்க்கட்சியினர் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினர்.‌ அவர்கள் அச்சத்தைப் போக்க, தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

"எனக்கு ஒரு மணி நேரம் தாருங்கள். மக்களவையில் மாநிலங்களுக்கான இடங்களை 50 சதவீதம் உயர்த்தும் திருத்தங்களுடன் திரும்புகிறேன். நாடாளுமன்றத்தின் பலம் அதிகரித்தால், கூட்டத்தொடர் நாள்களும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் 50 சதவீதம் இடங்களை அதிகரிக்கிறோம். சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நாங்கள் மேற்கொள்வோம்" என்றார்.

மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று நான் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார்... மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? என்று எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா சவால் விடுத்தார்.

ஆனால் எதிர்க்கட்சியினரோ தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் படி நாடெங்கும் மக்களவைத் தொகுதி வரையறை மறுசீரமைப்பு செய்து மாநிலம் வாரியாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யும் பொறுப்பும், அதிகாரமும் தொகுதி வரையறை மறுசீரமைப்பு ஆணையத்துக்கு மட்டுமே உண்டு. ஆகையால் உள்துறை அமைச்சரின் உத்தரவாதம் செல்லுமா என்ற சந்தேகம் உள்ளதாகக் கூறி மசோதாவை நிராகரித்தனர்.

“மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா என்ற போர்வையில் இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்க அவர்கள் (மத்திய அரசு) அரசமைப்புக்கு எதிரான உத்தியை பயன்படுத்தினர். 'இந்தியா' கூட்டணி அதைத் தடுத்துவிட்டது. இந்திய அரசமைப்பு வெல்லட்டும்!,” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபையில் கூறினார்.

“இது பாஜகவின் கபட நாடகம். பெண்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் தற்போது மக்களவையில் இருக்கும் எம்.பிக்கள் எண்ணிக்கையான 543இல் 33% அதாவது 181 இடங்களை பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்யலாமே அதை யாரும் தடுக்கப் போவது இல்லையே. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க விருப்பம் இல்லாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறது ஆளும் பாஜக. 2023ஆம் ஆண்டு அனைத்து கட்சி ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் (இந்திய அரசமைப்பு 106வது திருத்தச் சட்டம்) ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதே பிறகு எதற்கு தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வரவேண்டும்? அதுவும் தமிழ் நாடு, மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில்... தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடைமுறை விதி அமலில் உள்ள நேரத்தில்...” என்று திமுக

எம்.பி. கனிமொழி கருணாநிதி தனது எதிர்ப்பை ஆணித்தரமாக பதிவு செய்தார்.

“மக்கட்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதன் மூலம் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் அதே வேளையில் மத்திய அரசின் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை செம்மையாக அமல்படுத்தி மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா முதலிய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து அநீதி வழங்கிடும் தொகுதி வரையறை மசோதாவை எந்தக் காலத்திலும் செயல்படுத்த விட மாட்டோம்” என்ற கருத்தை தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா எம்பிக்கள் வலியுறுத்திப் பேசினர். இவ்வாறாக பாஜகவின் முயற்சி தோல்வியைத் தழுவியது.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முதன்முதலில் தேவகவுடா அரசால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 9, 1996 அன்று மக்களவையில் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டது. 11ஆவது மக்களவையின் காலத்துடன் அம்மசோதா காலாவதியானது.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேஜகூ அரசு, 1999 இல் 13ஆவது லோக்சபாவில் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தியது. 2002இல் சலசலப்புக்கு மத்தியில் இரண்டாவது முறையாக மசோதாவை முன்வைத்தது, ஆனால் தோல்வியடைந்து 13 மக்களவையின் பதவிக்காலத்துடன் அம்மசோதா காலாவதியானது.

2004 ஆம் ஆண்டில், ஐமுகூ அரசு, தன் கூட்டணியின் பொதுவான குறைந்தபட்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. மே 6, 2008 அன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசு மாநிலங்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி, நிறைவேற்றியது. ஆனால் மசோதாவை மக்களவையில் எடுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் காலாவதியானது. ஆக பலமுறை அறிமுகப்படுத்தியும் மக்களவையில் நிறைவேற்ற முடியாத நிலை!

2014இல் நரேந்திர மோடி அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த போதும் இதை நிறைவேற்றவில்லை. மீண்டும் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு 303 எம்பிக்களைப் பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் போது பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு மறுநாள் 454 வாக்குகள் ஆதரவாகவும், இரண்டு வாக்குகள் எதிராகவும் பெற்று நிறைவேற்றப் பட்டது.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று மாநிலங்களவையானது 214 வாக்குகளை ஆதரவாகக் கொண்டு ஒருமனதாக இம்மசோதாவை நிறைவேற்றியது.

அது 2023 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டமாக அமலுக்கு வந்தது. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகான முதல் தொகுதி மறுவரையறைக்கு பிறகு மட்டுமே இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று தெளிவுபடுத்துகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 2026 ஏப்ரல் 16 ஆம் தேதி 131 ஆவது சட்டத்திருத்த மசோதா மூலம் இட ஒதுக்கீட்டை தொகுதிமறுவரையறையுடன் சேர்த்து மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதை நிறைவேற்றும் முயற்சி மக்களவையில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்து இன்றுவரை செயல் வடிவம் பெறாமலே தொடர்கிறது!