அரசியல்

தமிழ்நாட்டிற்கு வரும் SIR - கட்சிகளின் கருத்து என்ன?

தா.பிரகாஷ்

தமிழ்நாட்டில் அடுத்து ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. SIR (Special intensive Revision) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை பீகாரில் மேற்கொள்ளப்பட்டபோது பல புகார்கள் எழுந்தன. இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இதுபற்றி சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கருத்துக்கேட்டோம்.

”வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது நடக்கும் திருத்தம் என்பது உள்நோக்கத்துடன் நடப்பதாக பீகார் நிரூபித்துள்ளது. ஓட்டுரிமையைப் பறிப்பதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை ஏன் நீக்கினோம் என்பதற்கான காரணத்தை சொல்லமாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தேவையில்லை என்பது எங்கள் கருத்து” என்றார் அவர்.Special Intensive Revision

”ஒருவேளை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்றால், அந்தப் பணிகள் தொங்குவதற்கு முன்னர், அதை எப்படி செய்யப்போகிறோம் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டி கருத்துக்கேட்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை அந்திமழையிடம் பேசுகையில், “தேர்தல் ஆணையத்தை ஆளுங்கட்சி பயன்படுத்திக் கொள்ளுமோ என்ற சந்தேகம் தேவையில்லாத ஒன்று. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு,’’ என்றவர் ”தேர்தல் நெருங்கும் சமயத்தில் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பது. இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது, இடம்பெயர்ந்தவர்களை பட்டியலிருந்து நீக்குவது, தற்காலிகமாக இடம் மாறுதல் ஆனவர்களை, மாறிய இடத்தில் அவர்களின் பெயர்களை சேர்ப்பது, ஒருவர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால், அதை அடையாளம் கண்டு நீக்குவது போன்ற பணிகளை அரசியல் கட்சியின் தேர்தல் முகவர்கள் கண்காணிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு, தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியலை பார்த்துவிட்டு நீக்கிவிட்டார்கள் என குற்றம் குறை சொல்வது என்பது ‘தும்பை விட்டு வாலை பிடிப்பது’ போன்றது,”எனவும் கூறுகிறார்.

திமுக செய்தித் தொடர்பாளரும் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளருமான பழ. செல்வகுமார். “பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தால் யார் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்றால் பெண்கள் தான். இதில் இஸ்லாமிய பெண்கள் அதிகம். அவர்களிடம் உள்ள ரேஷன் அட்டைகள், ஆதார் அட்டைகளை அடையாள அட்டையாக ஏற்கப்படாதது போன்ற பல்வேறு நடைமுறை பிரச்னைகள்தான் இதற்கு காரணம். பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள்தான் பாஜகவினருக்கு எதிரானது. இந்த அரசால் அதிகம் பலனடைந்தவர்கள் இவர்கள்தான் என்பதால் அவர்களை நீக்குவதற்கு ஒருசாரார் முயற்சிக்கலாம்” என எச்சரிக்கிறார் இவர்.

ஜி. ராமகிருஷ்ணன்

 “தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ள வெளி மாநிலத்தவர்களை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் மூலமாக அவர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைப்பதை நா.த.க. கடுமையாக எதிர்க்கிறது,’’ எனக் கூறுகிறார் இடும்பாவனம் கார்த்தி - நா.த.க. இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர். “வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறினால், அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காரணியாக மாறுவார்கள். இது, இதுவரை இருந்த திசைவழிப்போக்கை மாற்றிவிடும்.

இடும்பாவனம் கார்த்தி

இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதற்கு எதிரான குரலை பதிவு செய்ய வேண்டும். ஆளுங்கட்சியான திமுக இதை சமரசம் இல்லாமல் எதிர்க்க வேண்டும். அனைத்திந்திய அரசியலுக்காக தமிழர் இறையாண்மையைப் பலி கொடுக்க கூடாது,” என்றார் அவர்.

 விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ்,” பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் சொன்ன விதம், தேர்தல் ஆணையம் எப்படி தவறு செய்திருக்கிறது என்பதற்கான சான்றாகும். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் தான் தமிழ்நாட்டில் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. வடமாநிலங்களில் செய்தது போன்று அவர்களால் தமிழ்நாட்டில் செய்ய முடியாது. பாஜக எதிர்நிலையில் உள்ள கட்சிகள். குறிப்பாக திமுக அடித்தளம் வரை இறங்கி வேலை பார்த்துள்ளன. மேலும், பூத் ஏஜெண்டுகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அதனால், தேர்தல் ஆணையத்தில் கனவு பலிக்காது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் திருந்த வேண்டும் என்பது முக்கியமானது,” என்கிறார்.

நாராயணன் திருப்பதி

தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி,  “வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் மூலமாக வட இந்திய வாக்காளர்களை தமிழ்நாட்டில் நுழைத்து விடுவார்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பட்டியல் திருத்தம் முழுக்க முழுக்க, அனைத்து கட்சிகளின் முன்னிலையில் தான் நடக்கப் போகின்றது. இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதை விட்டுவிட்டு, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பது என்பது சரியான அணுகுமுறை இல்லை. உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விசயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறோம். நீதிமன்றம் கூறிய ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு விஷயம் இவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றால் அதை வைத்து விமர்சிப்பது என்பது மலிவான அரசியல்.” எனக் கூறுகிறார். இனிவரும் நாட்களுக்கு SIR தான் பேசுபொருளாக இருக்கப்போகிறது!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram