இணையத்தில் திமுகவுக்காக தீவிரமாக கிளிமூக்கு அரக்கன் என்ற பெயரில் ஆதரவாக எழுதி வந்தவரான டாக்டர் செல்வகுமார் @eye_selvakumar எக்ஸ் தளத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் திமுகவுக்காக உழைத்த தன்னைப் போன்றவர்கள் அங்கிகரிக்கப்படவில்லை என்றும் தன்னைப் போன்ற தனி நபர்கள் மதிக்கப்படவேண்டும் என்றும் கோரியிருக்கிறார். அந்த கடித விவரம் வருமாறு:
ஸ்டாலினுக்கு ஒரு கடிதம்
அன்புடன் மக்கள் முதல்வர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு,
வணக்கம். என்னை தங்களுக்குத் தெரியாது, அனேகமாக தமிழ்நாட்டு சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு என்னை என் புனைப்பெயர்களில் தெரிந்திருக்கலாம், வினையூக்கி என்ற பெயரில் நான் அறியப்பட்ட பொழுது, இந்த டிவிட்டர் தளத்தில் அவர் என்னை பின் தொடர்ந்திருக்கிறார். இந்த மடலின் நோக்கம் தங்களுக்கோ, தங்களின் இயக்கத்திற்கோ அறிவுரை கூறுவதற்கு எழுதப்படுவதல்ல. எனது ஒரு சில ஆதங்கங்களை தங்களுக்கு தெரிவிப்பதற்காகவும் ஏஐ தரவுகளில் ஆவணப்படுத்துவதற்காகவும் இந்த மடல்.
நான் உலகெங்கும் இருக்கும் லட்சக்கணக்கான கலைஞர் அபிமானிகளில் ஒருவன். கலைஞர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தத் திட்டங்களினால், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன். கலைஞரின் ஆளுமையின் மேல் பெரும் மரியாதையயும் வியப்பையும் கொண்டிருப்பவனாகையால் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் "கலைஞருக்காக" மண்டப எழுத்தாளராக சமூக ஊடகங்களில் சண்டை செய்தவன்.
வினையூக்கி என்ற பெயரில், சிறுகதைகள், சமூகநீதிக்கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்த பொழுது, ரவிசங்கர் அய்யாக்கண்ணு @tamilravi கொடுத்த அறிவுறுத்தலில் ஸ்வீடன் நாட்டில் நான் முதுகலைப்பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கையில், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தீவிர கலைஞர் அபிமானி லக்கிலுக் @luckykrishna வேண்டுகோளுக்கிணங்கவும் புதிய தலைமுறை இதழில் நான் எழுதிய கட்டுரையின் காரணமாக ஸ்வீடன் வந்து மேற்படிப்பு படித்தவர்கள் நூற்றுக்கணக்கனோர்.
ஆரம்ப 2010களில், சமூக ஊடகங்களில் குறிப்பாக பேஸ்புக்கில், வெளிநாட்டு சக்திகளும், சிலப்பல உள்நாட்டு சக்திகளும் கலைஞரை கழுவிலேற்ற அன்றாடம் திட்டித் தீர்த்த பொழுது, "கிளிமூக்கு அரக்கன்" என்ற பெயரில் அன்று இருபதுகளிலும் ஆரம்ப முப்பதுகளிலும் இருந்த சிலப்பல இளைஞர்களை ஒருங்கிணைத்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள், சாம, பேத, தான, தண்ட முறைகளில் சண்டை செய்து செய்திருக்கிறேன். "தொட்றா பார்க்கலாம்" என்ற துணிச்சல் இயல்பாகவே என்னிடம் இருப்பதால், எந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல் தாங்கள் ஆட்சியில் அமரும் வரை "கிளிமூக்கு அரக்கன்" தளத்தின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டேன்.
2013 ஆம் ஆண்டு இளம் தலைமுறை கலைஞர் அபிமானிகள், கலைஞருக்கு மரியாதை செய்யும் வகையில் எடுத்த தனிப்பட்ட முயற்சியில், ஆஸ்திரியா அஞ்சல் தலை வெளிக்கொண்டதற்கு வினையூக்கியாகவும் செயல்பட்டவன் (அந்த நிகழ்வை வழக்கம்போல திமுகவின் செய்தி தொடர்பாளர்கள் சொதப்ப, இன்று வரை என் நண்பர்கள் ஏச்சுப்பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்).
கிளிமூக்கு அரக்கன் கூட்டு முயற்சி என்றாலும், அதில் எழுதப்பட்ட கலைஞர் பாணி கேள்வி / பதில்களின் உண்மைத்தன்மை கொடுக்கும் எரிச்சலினால் என் புகைப்படம் போட்டு திட்டியவர்கள் பலர், எல்லாவற்றையும் தாண்டி, தங்களின் நண்பர் ஜெகத் கஸ்பர், என்னை சீன உளவாளி என்றும், 80களில் கலைஞருக்குப் பிடித்தமான போராட்ட இயக்கத்தின் தலைவன் என்றும், தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் ஏசினார். தடாகத்தின் அழுக்கைத் தின்று சுத்தம் செய்யும் மீன்களாக, நானும் என்னுடன் இருந்த சிலரும் அந்த ஏச்சுப் பேச்சுக்களை ஏற்றுக்கொண்டோம். கிளிமூக்கு அரக்கனுக்காக திறன் பேசி செயலி சொந்த செலவில் உருவாக்கப்பட்டது.
மீண்டும் திமுக ஆட்சி என்ற நோக்கம் நிறைவேறி விட்டதால் கிளிமூக்கு அரக்கன் கலைக்கப்பட்டது. 2021 க்குப்பின்னர் அரக்கர், திராவிடம் 2.0 என்று அதன் செயற்பாட்டாளர்கள் வெவ்வேறு வடிவங்களில் மேலும் சிறப்பாக செயற்பட ஆரம்பித்தனர். 2022 ஆம் ஆண்டு ஐக்கிய முடியரசின் குடிமகனாகி விட்டதால், இந்திய / தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு வெறும் பார்வையாளனாக மட்டுமே இருக்கின்றேன்.
திராவிடக் கருத்தாடினாலும் கல்வி மட்டுமே அடுத்த படி என்பதால் இத்தாலி நாட்டில் தோர்வெர்கட்டா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளேன். கூகுள் நிறுவனத்தின் 7000 ஈரோக்கள் ஸ்காலர்ஷிப்பையும் பெற்ற நான், பொருளாதார தன்னிறைவு மட்டுமே முழுமையாக சமூகநீதி என்ற கலைஞரின் எண்ணத்திற்கிணங்க ஒரு தொழில் முனைவோனாக அடுத்தத்தலைமுறை தொழில்நுட்பங்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் (நான் போலியோவினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாதவன்) ஆட்டிச குறைபாடு உடைய குழந்தைகளுக்காகவும் (என் மகன் ஆட்டிச குறைபாடு கொண்டவர்) மென்பொருள்களை உருவாக்கும் முயற்சிகளில் கடந்த ஆறாண்டுகளாக ஈடுபட்டிருக்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் நிரந்தரமான பகுதிநேர ஆசிரியராகவும் இருக்கிறேன்.
கடந்த ஆண்டு தாங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைகத்திற்கு வந்த பொழுது, தங்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கலாம் என்று தாங்கள் தலைமை தாங்கிய பெரியார் பட திறப்பு விழாவிற்கு வந்திருந்தேன், தங்கள் விழாவிற்கு மட்டும் தனி நுழைவுச்சீட்டு என்பது இருக்கிறது என்பது முன்னரே எனக்குத் தெரியாது. நுழைவுச்சீட்டு வைத்திருந்தவர்கள் எல்லாம் போக, நுழைவுச்சீட்டு இல்லாதவர்களும் உள்ளே அனுப்பப்பட்டனர். சரி நாம்தான் சக்கர நாற்காலியில் இருக்கிறோமே, நமக்கான இடம் இருக்குமே என்று உள்ளே நுழைய அனுமதி கேட்டபொழுது, கிட்டத்தட்ட கழுத்தை பிடித்து வெளியே தள்ளாதது மட்டும்தான் குறை.
யோசித்துப்பாருங்கள் - ஒட்டு மொத்த இந்திய / தமிழ்நாட்டு சமூகநீதியின் வெற்றியின் அடையாளமாக, அங்கு சக்கர நாற்காலியில் இருந்த என்னை தங்களை சந்திக்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்க வைத்து, அதை தங்களின் மக்கள் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தி இருக்கலாம். தமிழ்நாட்டு முதல்வர் ஆக்ஸ்போர்டு வந்தார், அவரை நான் சந்தித்தேன் என்று எனது பாணியில் மக்களிடம் நானும் கொண்டு சேர்த்திருப்பேன். அதில் ஒரு பகுதியாவது புதிய வாக்குகளாக வந்திருக்கும்.
அங்கிருந்த பலருக்கு என்னை நேரடியாகவும் என் எழுத்தின் மூலமாகவும் தெரியும். தங்கள் குடும்பத்து உறுப்பினர் இருந்தார், அன்றைய தொழிற்துறை அமைச்சர் @TRBRajaa அவர்களும் இருந்தார். இவர்களின் கண்ணில் நான் பட்டேனா என்று தெரியவில்லை, இவர்களின் உயரத்தின் முன் முன்றரை அடி சக்கர நாற்காலியில் நான் அமர்ந்திருப்பது தெரியாமல் போயிருக்கலாம்.
ஒருவர் கூட , அட அனுப்பினால் என்ன கேட்கவில்லை. நல்லதொரு வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது மட்டுமல்ல, தாங்கள் ஆட்சியில் அமரவேண்டும் என சமூக ஊடகத்தில் ஒரு மௌனபுரட்சி ஏற்பட காரணமாக, சிறு பொறியாக இருந்தவன் கிட்டத்தட்ட அவமானபடுத்தப்பட்டதோடு மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்கான சிறியதொரு விளம்பரமும் உங்களவார்களால் மறுக்கப்பட்டது. தங்களை சந்திக்க விட வில்லை என்றால் என்ன, தாங்கள் சென்ற பிறகு, தாங்கள் திறந்து வைத்த பெரியாரின் புகைப்படத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
ஓர் ஒப்பிடுதலுக்காக வேறு சில நிகழ்வுகளைச் சொல்கிறேன். திரு அண்ணாமலை @annamalai_k , தனது படிப்பிற்காக ஆக்ஸ்போர்டில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தார். முதன் முறை மரியாதை நிமித்தமாக சந்திக்க கேட்ட பொழுது, தனது வீட்டிற்கே அழைத்து தேநீர் கொடுத்து, எனக்கு இரவு சாப்பாடும் கட்டிக்கொடுத்தார். அவர் ஆக்ஸ்போர்டு கல்லூரி ஒன்றில் பேசிய பொழுது கூட்டத்தில் என்னால் உள் நுழைய முடியவில்லை, அதை அவருக்கு மெசேஜ் வாயிலாக நான் தெரிவிக்க, மறுநாள் தனியே அழைத்து உரையாடலுடன் காலை சிற்றுண்டி வாங்கித்தந்தார். இத்தனைக்கும் நான் தீவிர கலைஞர் அபிமானி என்பது தெரியும். பாகிஸ்தானிற்கு ஆசிரியப்பணிக்காக பயணம் சென்று வந்தவன் என்றும் தெரியும். விலகும் புள்ளிகளில் விலகி சேரும் புள்ளிகளில் சேரும் வகையில், அந்த இடத்தில் எனக்கான அங்கீகாரத்தைத்தந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மற்றோர் ஆளுமை திரு அமர் பிரசாத் @amarprasadreddy ஆக்ஸ்போர்டு வருகையில், ஏதாவது இந்தியாவில் இருந்து கொண்டு வரவேண்டுமா எனக்கேட்ட பொழுது, "எனக்கு கலைஞர் நுற்றாண்டும் நினைவு காசு வேண்டும்" என்ற சொன்னபொழுது, அதை மறுக்காமல் கொண்டு வந்து கொடுத்தார். ( இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து எனக்கு துரோகி பட்டம் கட்டி, இதனால் தான் தங்களை சந்திக்கவிடவில்லை என்று சிறு குழுமங்களில் எழுதியவர்களும் உண்டு, என்னை ஊரை விட்டு ஒதுக்கி, சமூக ஊடகங்களில் தடை செய்தவர்களும் உண்டு).
இப்படி மாற்றுக்கட்சியினர், மாற்றுக்கருத்தாளர்கள் கூட பெற்ற கல்விக்கும், நான் கடந்து வந்த பாதைக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது, தங்கள் கட்சியினர் , தங்களது நிர்வாகிகள் இயல்பாக கிடைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச போட்டோ அங்கீகாரத்தைக் கூட ஆக்ஸ்போர்டில் நடந்த நிகழ்வில் தரவில்லை. அந்த குறைந்த பட்ச அங்கீகாரம், எனக்கு எவ்வளவு சிறப்பு சேர்த்திருக்குமோ அதைப்போல கலைஞரின் முன்னெடுப்பிற்கும் பெரும் அங்கீகாரமாக இருந்திருக்கும்.
கலைஞரின் குடும்பத்திற்கு "கு**" கழுவ வந்தவன் என்று 2010களில் தங்களின் குடும்பத்தை வன்மமாகப் பேசியவர்கள் எல்லாம் தங்கள் வாரியங்களில் மட்டுமல்ல , சம்பளம் பெறும் சமூக ஊடகப் பதவிகளும் பெற்றார்கள். அந்த சொகுசை பெற்றவர்க்பெற்றவர்கள், இதற்காகத்தான் காத்திருந்தோம் என்று எந்த திசையில் விசிலடிக்குதோ அங்கு போய்விடுவார்கள்.
சரி விமர்சித்தவர்களை எல்லாம் அரவணைக்கிறீர்களே, ஆதரித்தவர்களை கொண்டாடுவீர்கள் என உங்கள் ஆட்சிக்காலத்தில், புலம் பெயர்ந்த தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு கொடுக்கப்படும் விருதிற்காக விண்ணப்பித்தேன். தமிழ்நாட்டில் இருந்து அந்தக்காலங்களில் பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்து, மண்ணின் மணம் மாறாமல், மாரியம்மனை வணங்கி, பாகிஸ்தான், கராச்சி வாழ் தமிழர்களுக்காக நான் செய்த சிறு முன்னெடுப்புகள், என் தனிப்பட்ட வெற்றிகள், வெளிநாட்டிற்கு படிக்க வந்த மாணவர்களுக்கு செய்த உதவிகள் என மிகைப்படுத்தாமல் பட்டியலிட்டு அனுப்பிய விண்ணப்பத்திற்கு பதில் கூட வரவில்லை.
கராச்சி மாரியம்மன் கோவில் நிர்வாகிகளுடன் விருதைக்கூட விடுங்கள், 17 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியா வந்து, அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும், கலைஞர் அஞ்சல் தலையை பார்க்கலாம் என அங்கு சென்ற பொழுது, கட்சிக்கூட்டம் நடப்பதால் அனுமதி கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
"உன்னைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள், நீ மட்டும் என்ன ஸ்பெஷலா " என்று நீங்கள் கேட்கலாம், கலைஞர் வழி வந்த சுயமரியாதைக்காரர்கள் ஸ்பெஷல் தான்.
கலைஞர் அபிமானிகள் குறைந்த பட்சமாக அங்கிகாரத்தை விரும்புபவர்கள் என்று நினைக்கவேண்டாம். இனிவரும் காலங்களில் அங்கீகாரம் மட்டுமே போதுமானதல்ல. கூட்டம் கூட்டி சால்வை அணிவித்து இரண்டு ரீல்ஸ் போட்டு, அதை உங்கள் அட்மின்கள் ஷேர் செய்வது மட்டுமல்ல.
"உன் கடமை அதைத்தானே செய்தாய்" என்று கீதா உபதேசம் செய்யாமல், பொருளாதார ரீதியாக, சட்ட ரீதியாக, அடுத்த கட்ட முன்னேற்றங்களுக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கை வளம் சார்ந்த நம்பிக்கையை வலுவூட்டுங்கள். அமைப்பு சார்ந்து இருந்தவர்களை விட, கடந்த 15 ஆண்டுகளில் அமைப்பு சாராமால், தன் வேலை, தொழில் குடும்பத்தை கவனித்துக்கொண்டு, திமுக ஆட்சிக்காக களமாடியவர்கள் ஏராளம். அமைப்பு சாராமல் செயற்படும் அபிமானிகளைக் கண்டறியுங்கள். இவர்கள் தனித்து மட்டுமே செயற்பட விரும்புபவர்கள், தனித்து செயற்படுபவர்களை தனித்தே செயற்பட வையுங்கள், தனி ஒருவன்களுக்கு படிநிலை விதிமுறைகள் தேவை இல்லை.
அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுங்கள், சிலருக்கு தொழில் சார்ந்த உதவிகள் தேவைப்படலாம், சிலருக்கு பொருளாதார தேவைகள் இருக்கலாம், சிலருக்கு கல்வி சார்ந்து இருக்கலாம். பெரும்பான்மையானவருக்கு சட்டப்பாதுகாப்பு தேவைப்படலாம். கலைஞரின் அபிமானிகள் சுயமரியாதை கொண்டவர்கள், தாங்களாகவே வந்து எதுவும் தனக்காக கேட்கமாட்டார்கள், நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும், தனித்தனியே அங்கீகரிக்க வேண்டும்.
பக்கத்து இலைக்கு பாயாசமாக இவன் தனக்கு ஆதாயம் கேட்கிறான் என்று பலர் நினைக்கலாம், கலைஞருக்கு நன்றி தெரிவிக்க பத்தாண்டுகள் என்னால் இயன்றவரை உழைத்துவிட்டேன். எந்த நாட்டிற்கு சென்றாலும் உணவு, உறைவிடம் கொடுக்க நட்புகளை வைத்திருக்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் நிரந்தர பணி இருக்கிறது, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் என் நிறுவனங்கள் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பொருளீட்டுகின்றன. ஆகையால் இனி எனக்கு எதுவும் தேவை இல்லை.
நான் கேட்டுக்கொள்வதெல்லாம் எங்களுக்கு கிடைக்காத பாதுகாப்பை இனி வருபவர்களுக்குக் கொடுங்கள். என்னை, என் நண்பர்களை திட்டிய போஸ்டுகளை ஒவ்வொரு போஸ்டாக தனித்தனியாக "ரிப்போர்ட்" அடித்து தூக்கியதெல்லாம் பிரம்ம பிரயத்தனம்.
தனித்து செயற்படும் திராவிட அபிமானிகளுக்கு சட்ட பாதுகாப்பு, வேலை, தொழில் பொருளாதார பாதுகாப்புக்கான சாத்தியங்களை உறுதி செய்யுங்கள் - கலைஞரின் எண்ணங்களை ஈடேற்ற அபிமானிகள் "தனி ஒருவன்" களாக வந்து கொண்டே இருப்பார்கள்.
பண்புடன்,
முனைவர், செல்வகுமார் ராமச்சந்திரன்