பலமான கூட்டணி, ஏராளமான நலத்திட்டங்கள் என்ற வலுவான பின்னணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது திமுக கூட்டணி. விஜய் தலைமையிலான த.வெ.க-வுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு அலை வீசும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சமஸ், இந்த ஆதரவு அலையை முன்கூட்டியே கணித்து தெரியப்படுத்தி இருந்தது பெரும் ஆச்சர்யம். இந்த வெற்றியைப் பற்றி அவரிடம் பேசினோம்.
2026 தேர்தல் முடிவுகள் வரலாற்று அதிர்வுகளைத் தரும் என்று முன்கூட்டியே கணித்தீர்கள். எப்படி?
மக்கள் மத்தியில் சுற்றிக்கொண்டிருந்தால், நாடு செல்லும் திசையைக் கணிப்பதில் செய்தியாளர்களுக்கு பெரிய சிக்கல் இருக்காது. ஊடக ஆசிரியர் என்றாலும், இடைவிடாத ஊர்சுற்றி நான். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஓர் அரசியல் சக்தி வேண்டும் என்ற எண்ணம் மெல்ல உருவெடுத்து, ஒரு தசாப்தத்துக்கு மேல் ஆகிறது.
இதை எங்கோ மோப்பம் பிடித்ததால்தான், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்குமுன் இடதுசாரிகள், விசிக, மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; பாமக தனித்து நிற்கும் முடிவை எடுத்தது; பாஜக தனித்து நின்றது. இவர்கள் யாராலுமே செல்வாக்கான ஒரு புதிய முகத்தையோ, நம்பகத்தன்மை மிக்க ஒரு முகத்தையோ முதல்வர் முகமாக முன்னிறுத்த முடியாதது அன்றைய பெரும் பலவீனம்; தவிர, அப்போதுதான் மாற்றுக்கான சிந்தனை மக்களிடம் மெல்ல வளர்ந்துகொண்டிருந்தது. விளைவாக, ஓட்டுகள் சிதறி அப்போதைய முயற்சிகள் தோற்றன; அதிமுக, திமுக இரண்டும் 225/234 இடங்களை சட்டமன்றத்தில் பிடித்தன. ஆனாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், 2016 தேர்தலில் 21% பேர் அதிமுக, திமுக அணி அல்லாத பிற கட்சிகளுக்கு வாக்களித்திருந்தனர்.
அதற்குப்பின் ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் அடுத்தடுத்து இறந்ததும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி தமிழக அரசியலில் பாஜக குறுக்குசால் ஓட்டியதும், தமிழக மக்களுடைய கவனத் திசையை மாற்றியமைத்தது. முதலில் பாஜகவுக்கு இங்கே இடம் இல்லை என்று உறுதிபட சொல்ல வேண்டும் என்று பெருவாரி மக்கள் எண்ணினார்கள். மக்களுடைய எண்ணத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்டதாலும், திமுகவில் அரை நூற்றாண்டுக்குப் பின் தலைமை மாற்றம் ஏற்பட்டிருந்ததாலும், மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று புதிய முகமான ஸ்டாலின் தொடர்ந்து சொன்னதாலும், பாஜக எதிர் சக்திகள் அத்தனையையும் திமுக குடையின் கீழ் ஸ்டாலினால் ஒருங்கிணைக்க முடிந்ததாலும் மக்கள் திமுகவின் பின் அணிதிரண்டனர்.
2019, 2021, 2024 இந்த மூன்று தேர்தல்களிலும் திமுக பெற்ற பெரும் வெற்றிக்கு உண்மையில் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு இணையாக இன்னொருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்: பிரதமர் மோடி. அடுத்து, ‘மாற்றம் - விடியல்’ எனும் பெரும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த ஸ்டாலினால், கட்சியிலோ, ஆட்சியிலோ பெரும் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை. ஒரு முதல்வராக ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டார்; நிறைய மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார் என்றாலும், கட்சியிலும் ஆட்சியிலும் திமுகவுக்கே உரிய பண்ணையார்த்தனமும், குடும்ப அரசியலும் தொடர்ந்து நீடித்தது.
காலமும் சூழலும் உருவாக்கித் தந்த வெற்றிகளை என்றைக்கும் நிரந்தரமானதாக நினைத்தார் ஸ்டாலின். மகன் உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகளைக் கொடுத்து, அவரே அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு கொண்டுவந்ததும், மருமகன் சபரீசன் பின்கட்டு அரசியல் முடிவுகள் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் அமர்த்தப்பட்டதும் திமுகவின் முதல் குடும்பம் மக்களை எவ்வளவு குறைத்து மதிப்பிட்டது என்பதற்கான உதாரணம். ஆக, மக்களிடம் இயல்பாக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வளர்ந்துகொண்டிருந்தது. ஆனால், இந்த அதிருப்தியைத் தன் குடைக்கு கீழே கொண்டுவரும் நிலையில், அதிமுகவோ அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ இல்லை. இந்தச் சூழலில்தான் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் அரசியல் களத்துக்கு வந்த விஜய் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கலானார். திமுகவையும், பாஜகவையும் ஒருசேர அவர் எதிர்த்தார் என்பதும், அதிமுகவை மென்போக்கோடு அணுகினார் என்பதும் மெல்ல அதிமுகவின் இடத்தை நோக்கி – அதாவது திமுகவின் பிரதான எதிரி – எனும் இடத்தை நோக்கி விஜய்யின் தவெகவை நகர்த்திக்கொண்டிருந்தன.
களத்துக்கு விஜய் வந்த பிறகு, மக்களை நான் சந்தித்தபோதும் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். சமகால அரசியல் சூழல் குறித்து பேசும்போது, விஜய் சம்பந்தமாக நானே எந்தக் கேள்வியையும் கேட்காத சூழலிலும் விஜய்யைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல ஏதேனும் ஒரு விஷயம் இருந்தது; ஆதரவான தொனியிலோ, எதிரான தொனியிலோ. நாளாக நாளாக மக்களிடம் இந்த ஆர்வம் அதிகரித்தது.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர்; விஜய்யைப் பார்க்க பல மணி நேரம் காத்து நின்றனர். இதெல்லாம், அண்ணா, எம்ஜிஆர் காலத்தில் நடந்ததாக நாம் கேட்ட, படித்த விஷயங்கள். தொலைக்காட்சி பார்வையாளர் தரவுகளிலும் இது பிரதிபலிப்பதைப் பார்த்தேன். சராசரி நாட்களைக் காட்டிலும், விஜய் பேச வரும் நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களுக்கு முன்னரே கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஓர் ’ஆட்டத்திருப்புநர்’ (Disrupter) ஆக உருவெடுக்கும் என்பது திட்டவட்டமாக தெரிந்தது. இதைத் தாண்டி வெற்றியாளர் எனும் இடத்துக்கு விஜய் நகர்ந்தது தேர்தல் நடந்த கடைசி மாதத்தில் நிகழ்ந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபோது எல்லோருமே அதிர்ச்சிதான் அடைந்தார்கள். விஜய்க்கு இவ்வளவு செல்வாக்கு இருப்பதை பெரும்பான்மை ஊடகங்கள் சொல்லவே இல்லை?
ஊடகங்கள் மீது திமுக செலுத்திய ஆதிக்கமே இதற்கான காரணம். தேசிய அளவில் பாஜக எப்படி பெரும்பான்மை ஊடகங்களை ‘அரவணைத்தும், அழுத்தியும்’ ஒடுக்கியதோ அதையே திமுக இங்கும் செய்தது; 2024 மக்களவைத் தேர்தலை நினைவுகூர்ந்திடுங்கள்; 400 தொகுதிகளை வெல்வோம் என்றார் மோடி; அதற்கேற்பவே ஊடகங்களின் நடனமும் இருந்தன; என்னைப் போன்ற மிகச் சிலரே, ‘பாஜகவால் 225-250 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாது’ என்று பேசினோம்; அதேதான் 2026இல் தமிழ்நாட்டிலும் நடந்தது; 200 தொகுதிகளை வெல்வோம் என்றார் ஸ்டாலின்; அதற்கேற்பவே ஊடகங்களின் நடனமும் இருந்தன. அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு, ஒரு புதிய அரசியல் சக்தி உருவானதையும், ஒரு முதல்வரே தன் சொந்தத் தொகுதியில் தோற்கும் அளவுக்கு அதிருப்தியலை இருந்ததையும் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருந்தன என்பது, ஆச்சரியம் அல்ல; அவலம்; வெட்கக்கேடு!
எந்த அரசியல் அனுபவமும் இல்லாத நடிகரின் பின்னால் கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் தமிழக வாக்காளர்கள் 1.7 கோடி பேர் திரண்டது எப்படி சாத்தியமானது? இது எதைக் காட்டுகிறது?
திராவிட கட்சிகளின் கெட்டி தட்டிப்போன அரசியல் மீதான அதிருப்தியைத்தான் இது காட்டுகிறது; அந்த அதிருப்திதான் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இவர்கள் எந்த அளவுக்கு மக்களைச் சோதிக்கக் கூடியவர்கள் என்பதற்கு மோசமான ஓர் உதாரணர்: திமுகவின் பொதுச்செயலரான துரைமுருகன். 1938இல் பிறந்தவர். திமுகவின் மாணவர் அரசியலோடு வளர்ந்து, ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்களில் ஒருவர் துரைமுருகன். 1971இல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானபோது அவருக்கு 31 வயது. இந்த 87 வயதிலும் தள்ளாத உடல்நிலையோடும் 2026 தேர்தலில் போட்டியிட்டார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம்… அவர் ஊரில் அவர்தான் ராஜா; கூடவே பிள்ளையையும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி இளவரசராக்கிவிட்டார். கட்சியாலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தத் தேர்தலில், தவெக சார்பில் சுதாகர் என்று ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்திருப்பதோடு, மூன்றாவது இடத்துக்கு துரைமுருகனைத் தள்ளியிருக்கிறார்கள் காட்பாடி தொகுதி மக்கள். இதை தவெக மீதான நம்பிக்கை என்பதா, திமுக மீதான அதிருப்தி என்பதா? இரண்டும்தான்!
ஏன் இந்த மாற்றமானது, அரசியல் தளத்திலிருந்து வந்த ஒருவர் மூலம் நேராமல், சினிமா தளத்திலிருந்து வந்த ஒருவர் மூலம் நடக்கிறது என்றால், இந்த அரை நூற்றாண்டில் சினிமாவைத்தான் நாம் விசுவரூபமாக வளர்த்தெடுத்தோம். இதையும் திராவிடக் கட்சிகள் கணக்கில்தான் எழுத வேண்டும்; காங்கிரஸ் ஆட்சி காலம் வரை தீவிரமான அரசியலுக்கான களமாக இருந்தவைதானே நம்முடைய பள்ளி, கல்லூரிகள்? 1965இல் மொழிப் போரை முன்னின்று நடத்தியவர்கள் நம்முடைய மாணவர்கள்தானே? அப்படிப்பட்ட கல்வி நிலையங்கள் எப்படி அரசியல் நீக்கம் செய்யப்பட்டன? 1971 முதலாகத்தானே படிப்படியாக இது தொடங்கியது? எதை விதைப்போமோ அதைத்தானே அறுக்க முடியும்!
தமிழ்ச் சமூகத்திடம் விஜய் என்னவாக சென்றடைந்திருக்கிறார்?
எம்ஜிஆர், ரஜினி போன்றவர்கள் சமூகத்தில் எப்படியான பிம்பமாக உருவெடுத்தார்கள் என்பது அறிவுச் சமூகத்துக்குத் தெரிந்தது. விஜய் விஷயத்தில் அதை நாம் தவறவிட்டுவிட்டோம்; நானும்கூட விஜய் என்னவாக சமூகத்தினுள் நுழைந்திருக்கிறார் என்பதைக் கவனிக்க தவறிவிட்டேன். ‘அண்ணன் - நம் வீட்டு பிள்ளை’ - இப்படி ஒரு பிம்பத்தை விஜய் வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதை மக்களுடனான உரையாடல் வழியாக தெரிந்துகொண்டேன்; அதாவது, குழந்தைகளுக்கு மாமா, இளையோருக்கு அண்ணன், பெரியவர்களுக்கு பிள்ளை; மேலும் பலருக்கு கனவு நாயகன். ஆரம்பத்தில் விஜய்யினுடைய தாக்கம் 10%-20% வரையறைக்குள்தான் இருந்தது; அதுவும் அவருடைய ரசிக வட்டாரத்துக்குள். அரசியலுக்கு விஜய் வந்த பிறகு, அவரை எல்லோரும் கட்டம் கட்டுகிறார்கள் எனும் உணர்வு பரவலாக வளர்ந்துவந்தது. மேலே, விஜய் பெயரைக்கூட தலைவர்கள் குறிப்பிடுவதில்லை; கீழே சமூகவலைதளங்களில் சதா விஜய்யைத் தாக்கிப் பேசிக்கொண்டிருப்போம் என்ற திமுகவின் இரட்டைத்தனத்துக்கு விஜய் வளர்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு. கரூரில் விஜய்யைப் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் கொடுமை; விஜய்யும் நடந்த கொடுமைக்கு ஒரு முக்கிய காரணம்; ஆனால், அந்த ஒரே விஷயத்தை வைத்து அவர் அரசியல் வாழ்க்கையையே முடித்துவிடலாம் என்ற அளவுக்கு தன்னுடைய பிரச்சாரப் படையை பயன்படுத்தியது திமுக. அடுத்து ‘ஜனநாயகன்’ முடக்கப்பட்டபோது, பாஜகவும் விஜய்யை ஒடுக்குவதான பார்வை உருவானது; விஜய்யை பாஜக பின்னிருந்து இயக்குகிறது எனும் திமுகவின் பிரச்சாரத்துக்கு இது முடிவு கட்டியது. விஜய் மனைவி சங்கீதாவின் விவாகரத்து விவகாரத்தை திமுகவினர் சமூகவலைதளங்களில் கையாண்ட விதம் மேலும் அவர் மீது பச்சாதாப உணர்வை மக்களிடம் உருவாக்கியது. வீட்டில் மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை; படத்துக்கு ரூ.200 கோடி எனும் உச்ச சந்தை மதிப்பில் உள்ளபோது, சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார்; தொடர்ந்து அவர் தாக்குதலுக்கு உள்ளாகிறார் எனும் உணர்வு பரவலாக இருந்தது. இவ்வளவுக்கும் நடுவில், “உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்”, “எல்லோரும் ஒரே கூட்டணியாகி என்னை எதிர்க்கிறார்கள்”, “ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள்” என்று திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்தார் விஜய். மக்களிடம் அது எடுபட்டது.
அதிபர் தேர்தல்போலத்தான் 2026 தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். முகமே தெரியாத வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், இப்போதும் சொல்கிறேன். விஜய்யின் தவெக பெற்ற வாக்குகளில் சரிபாதிதான் விஜய்க்கான வாக்குவங்கி; சரிபாதி மாற்றத்துக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு. இந்த 35% வாக்குவங்கியைத் தக்கவைப்பதே விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும்; விஜய் முன்வைத்த முழக்கங்களும், அவர் உருவாக்கியிருக்கிற எதிர்ப்பார்ப்புமே அவர் முன்னுள்ள பெரும் சவாலாக நீடிக்கும்!
சமூகத்தின் எப்பிரிவினர் தவெக பின்னால் திரண்டதாகக் கருதுகிறீர்கள்?
மாற்றம் வேண்டும் என்று எண்ணி வாக்களித்தவர்கள் சமூகத்தின் அத்தனை பிரிவுகளிலும் இருந்தார்கள். இல்லையென்றால், கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குள் எப்படி மாநிலம் தழுவி 35% வாக்குகளை ஒரு கட்சி குவிக்க முடியும்? ஆயினும், உங்கள் கேள்வி அர்த்தபூர்வமானது. தவெகவின் தொடர் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, மாநிலத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குள்ள தலித்துகள் – சிறுபான்மையினர் (21%+12%) இரு தரப்புகளையும் தவெக தனக்கான அடித்தளமாகக் கருதுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அது சென்றால், மோசமான அணிதிரட்டலுக்கு வழி வகுக்கும் என்று அஞ்சுகிறேன். குறிப்பாக, பாஜகவின் பெரும்பான்மை மத அரசியலுக்கும், பெரும்பான்மை எண்ணிக்கையிலான நிலவுடைமைச் சாதிகளின் அணிதிரட்டலுக்கும் வழிவகுக்கக் கூடும். தவெக எதிர் திமுக என்றே விஜய் இந்த அரசியல் களத்தைக் கட்டமைக்க நினைத்தாலும், தவெக எதிர் பாஜக என்றே அது மாறும். ஆகையால், எல்லோரையும் அரவணைக்கும் அரசியலை எம்ஜிஆரிடமிருந்து விஜய் கற்க வேண்டும் என்று சொல்ல எண்ணுகிறேன்.
திராவிடக் கட்சிகள் தம்மை எப்படி மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும்?
இரு கட்சிகளுமே பாம்புகளைப் போல சட்டை உரித்துக்கொள்ள வேண்டும்; புது ரத்தம் பாய்ச்சிக்கொள்ள வேண்டும். திமுக, அதிமுக இரண்டுமே ஆழ்ந்த வேர்களை சமூகத்தில் கொண்டவை என்பதோடு, இன்றும் குறைந்தது 40% ஓட்டுவங்கியைத் தனித்தே கொண்டிருப்பவை. ஆனால், இரு கட்சிகளுமே மையப்படுத்தப்பட்ட அதிகாரச் சிறையில் அடைபட்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்த அளவில் கட்சியின் தலைமையைக் குடும்பத்துக்கு வெளியே பகிர்ந்துகொள்ள அதன் முதல் குடும்பம் தயாராக வேண்டும்; ஸ்டாலின் தலைவர் பதவியில் நீடிக்கிறார் என்றால், செயல் தலைவர் பதவியை உருவாக்கி அதை இளைஞர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்; கிளைக் கழகங்கள் வரை சரிபாதி இடங்களில் இளைஞர்களைக் கொண்டுவர வேண்டும்; சில விதிவிலக்குகள் தாண்டி 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு, செயல்பாட்டு பதவிகளிலிருந்து விடை கொடுத்துவிடுவதைக்கூட பரிசீலிக்கலாம். அதிமுகவுக்கு இந்த விஷயத்தைச் செய்வது மேலும் எளிதாக இருக்கலாம். முக்கியமாக ஒரே விஷயம்தான், கட்சியைக் கட்சியாக அணுக வேண்டும்; கம்பெனி மாதிரி அணுக ஆரம்பித்துவிட்டால், மக்கள் ஒரு கட்டத்தில் தூக்கி கடாசிவிடுவதை யாராலும் தவிர்க்க முடியாது.
வேட்பாளர்களும் அவர்கள் சமூகப் பின்னணியும் பங்களிப்பும் முக்கியமில்லை. விஜய், விசில்தான் முதன்மை என்பது இந்தியாவில் யாரும் வேறெங்கும் கற்பனை செய்ய முடியாத நிகழ்வு. இந்த ‘கல்ட் மனநிலை’ ஆரோக்கியமானதா?
ஜனநாயக அரசியலுக்கு, ‘கல்ட் மனநிலை’ எப்போதுமே ஆபத்துதான். அதேசமயம், சமூகத்தின் ஆழ்ந்த மனநிலையோடும் பொருத்திப் பார்க்க வேண்டியது இது. தமிழ்நாடு எப்போதுமே ‘ஆளுமை வழிபாட்டு’ பண்பாட்டைக் கொண்டிருக்கிறது; அரசியலில் மட்டும் அல்ல; அரசியலுக்கு வெளியிலும்கூட. இயற்கை வேளாண்மையைப் பேசக்கூட ‘நம்மாழ்வார்’ என்று அதற்கு ஒரு கல்ட் தேவைப்பட்டது என்பதே உண்மை. ஆளுமை வழிபாடு என்பது இந்தச் சமூகம், தான் நேசிக்கும் ஆளுமைகள் மீது செலுத்தும் அதீத அன்பின் வெளிப்பாடு; ஒருவிதமான பழங்குடி மரபின் தொடர்ச்சி என்றும்கூட சொல்லலாம். அதேசமயம், அன்பின் வழியாக சுரண்டல் நடந்தாலும் சுரண்டல் சுரண்டல்தான் எனும் தெளிவும் நம்முடைய மக்களுக்கு இருக்கிறது என்றே நம்புகிறேன். தங்களுடைய நம்பிக்கைகள் பலிக்காத காலகட்டத்தில் எல்லாம் அவற்றைத் தூக்கிப்போட தமிழ் மக்கள் தயங்கியதே இல்லை!