அரசியல்

தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைவிடுவாரா மோடி?

அசோகன்

அகில இந்திய அரசியலில் அவ்வப்போது தீவிரப் பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. நீண்ட காலப் போராட்டங்களும் குறுகிய காலப் போராட்டங்களுமாக தலைநகர் டெல்லி கலகலக்கும். இம்முறை போராட்டகளமான ஜந்தர் மந்தர் அடைக்கப்பட்டு, அந்த இடமே இனி போராட்டத்துக்கான இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது!

கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்ட அறிவிப்பால் டெல்லியே மிகப்பெரிய காவல்துறை கோட்டையாக மாறிவிட்டது!

இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் இருப்பவர்கள் போன்ற வாக்காளர் பட்டியல் குறைபாடுகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனப்படும் தேர்தல் ஆணையச் செயல்பாடு பல மாதங்களாக எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகி வந்தது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீஹார் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளே தோல்வி அடைந்த நிலையில் இந்த விமர்சனம் வலுப்பெற்றது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இரு ஆணையர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தபோதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர்குமார் மீறிச் செயல்பட்டார் என்று இந்திய எக்ஸ்பிரஸ் புலனாய்வு செய்தி வெளியிட்ட பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தீவிரமானது.

அடிப்படையில் இந்த சிறப்புத் திருத்தத்துக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் உள்ளது என பீகாரில் தொடங்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது. ஆனாலும் வாக்காளர் தன் உரிமையை, தானே நிரூபிக்கவேண்டி இருக்கிறது; இந்நிலை ஒடுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினருக்கு எளிதாக இல்லை. எனவே பெருமளவில் அவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கச் செய்யும் அளவில் இது நடைபெற்றுள்ளது என்பதே எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

முன்னதாக கல்வி தொடர்பான குளறுபடிகளில் சமூக ஊடகத்தில் முளைத்த கட்சியான கரப்பான் பூச்சிக் கட்சியின் இளம் தலைவர்கள் புதுடெல்லியில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்திருந்தனர். இளம் தலைமுறையின் அப்போராட்டம் பெரிய அளவில் வியப்புடன் பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கரப்பான் பூச்சி கட்சியினரும் இந்த விவகாரத்தில் ஞானேஷ்வர் குமாரின் பதவி நீக்கம் கோரி போராட்டத்தில் குதித்தனர்.

இதை அடுத்து அமைப்புரீதியான பலம் அற்ற கரப்பான்களை அரசு தன் முழு பலத்தையும் கொண்டு ஒடுக்கிவிட்டது. காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றம் நோக்கி ஊர்வலம் மேற்கொண்டு, இது தொடர்பான வழக்குத் தொடர ஒப்புக்கொண்டு போராட்டத்தைச் சற்று ஒத்தி வைத்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம தெரிவித்த கணக்கின்படி பெயர் நீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் 38 லட்சம். அதில் 37 லட்சம் மனுக்கள் தீர்க்கப்படவில்லை. மேற்குவங்கத்தில் 27 லட்சம் பெயர்கள் ‘தர்க்க ரீதியான குறைகளால்’ நீக்கப்பட்டன. அவற்றில் 22 லட்சம் பேர் மீண்டும் மனுச் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு திருப்பமாக வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் 16 லட்சம் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதை யார் செய்தது என்று உறுதியான தகவல் இல்லை. இது மர்மமாகவே உள்ளது. தேர்தல் ஆணையமே இந்த எதிர்ப்பு மனுக்களைப் பதிவு செய்துள்ளதாக சமீபத்தில் வெளியான தி வயர் தளக் கட்டுரை ஒன்று கூறுகிறது.

படிவம் 7 என்பது வாக்காளர் பெயரைப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் படிவம். வாக்காளர் இறந்துவிட்டார், இடம் மாறிவிட்டார் என்றால் அதைத் தரலாம். ஆனால், இந்தப் படிவம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக உ.பி.யைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. தனுஜ் புனியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

“உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் நீக்கிவிட்டால் மீண்டும் சேர்ப்பதற்கு படிவம் 6 தரவேண்டும். அதில் இதற்கு முன்னால் தேர்தல்களில் நீங்கள் வாக்களித்ததே இல்லை என்று உறுதிமொழி கொடுக்கவேண்டும். முன்னர் வாக்களித்திருந்து நம் பெயர் நீக்கப்பட்டிருந்தால் இந்தக் கையெழுத்து நாம் பொய் சொல்வதாக ஆகாதா?” என்றுதான் இந்த நடவடிக்கைக்கு எதிராகச் செயல்படும் நடிகர் பிரகாஷ் ராஜ் போன்ற செயற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள்.

இந்தப் பிரச்னை குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் ,’உச்சநீதி மன்றம் தனக்கு முன் தேர்தல் ஆணையம் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் ஆணையம் பக்கமேகூட தீர்ப்பளிக்கலாம். ஆணையம் செய்தது எல்லாம் தவறு என்றுகூடத் தீர்ப்பளிக்கலாம். தமிழ்நாடு தொடர்பான வழக்கொன்றின் ஆளுநர் செய்தது தவறெனத் தீர்ப்பளித்தது போலவும் செய்யலாம். மத்திய அரசு நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுமா?’ என்று கேட்பதுடன் தற்போது இப்பிரச்னை கூட்டுப் பொறுப்புணர்வையும் தனிப்பட்ட நியாய உணர்வையும் சார்ந்துள்ளது” என்று கூறுகிறார்.

பொதுமக்கள் எதிர்ப்பு, ஞானேஷ்குமாரைப் பதவிவிலகக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, உச்சநீதிமன்ற விசாரணை என பல முனைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் எதிர்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வுத் தாள் கசிந்த பிரச்னையில் இளைஞர் போராட்டத்துக்குப் பணிந்து தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்தது போல், இம்முறையும் பிரதமர் மோடி இறங்கிவந்து ஞானேஷ்குமாரை வீட்டுக்கு அனுப்புவாரா?

உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் வெல்லவேண்டும் என்பதில் பாஜக மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு ஞானேஷ்வர் குமார் உதவி தேவை என பாஜக நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பாஜக 2021-ல் தான் கொண்டுவருவதில் உறுதியாக இருந்த விவசாய சட்டங்களை மிகப்பெரிய விவசாயிகள் போராட்டத்துக்குப் பணிந்து கைவிட்டது. அதற்குக் காரணம் அப்போது உத்தரப்பிரதேசத்தில் வந்த மாநிலத் தேர்தல்தான். மோடி பின்வாங்கிய ஒரே அம்சம் இன்றுவரை அதுதான். அந்த தேர்தலில் உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியைப் பெற முடியவில்லை. 63-இல் இருந்து 33 ஆக எம்பி சீட் எண்ணிக்கை குறைந்தது. வாரணாசியில் மோடியின் வெற்றி வாக்குகள்கூடக் குறைந்துபோயின. பாஜகவால் தனித்து அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போனதற்கு இது ஒரு காரணம்.

இம்முறையும் அம்மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக இந்த வாக்காளர் சிறப்புத் சீர்திருத்தப் பிரச்னை வந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பது என்றால் ஞானேஷ்குமாரைக் கைவிட்டுவிட்டு உபியில் மாநிலத் தேர்தலை வென்று காண்பிப்பதன் மூலம் சாதிக்கலாம்.

ஆனால் கரப்பான் பூச்சி கட்சி, இடதுசாரிகள், ராகுல்காந்தி ஆகியோரின் செல்வாக்கை உயரச் செய்யும் வாய்ப்பாக இந்த தேர்தல் ஆணையப் பிரச்னையை பாஜக ஏன் அளித்திருக்கிறது? உ.பி. மாநிலத் தேர்தலை நினைத்து தன் திட்டங்களை வகுக்க மோடி அமைதி காக்கிறாரா?

இன்னும் அவர் முடிவெடுத்ததாகத் தெரியவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram