மதுரை முருக பக்தர்கள் மாநாடு 
அரசியல்

வேலாயுதமா? அரசியல் ஆயுதமா?

அசோகன்

மதுரையில் இந்து முன்னணி நடத்தி இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் அரசியல் போக்கை எப்படிக் கொண்டுசெல்லலாம் என்பது பற்றிய ஒரு முடிவுக்கு வலதுசாரி சிந்தனையாளர்கள் வந்திருப்பதைக் காட்டுகிறது.

இந்த மாநாட்டில் பாஜக தலைவர்களுடன் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இது அரசியல் மாநாடு இல்லை என்று பாஜக தலைவர்கள் சொன்னாலும், தமிழ்நாட்டில் முருகன் வழியாக தங்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பெரியார் அண்ணா போன்ற திராவிடத் தலைவர்கள் பற்றிய விமர்சனக் காணொலி திரையிடப்பட்டது, அதிமுகவுக்குத் தற்காலிக தர்மசங்கடத்தைக் கொடுத்திருப்பது வேறு கதை.

2020-இல் கொரோனா காலகட்டத்தில் அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை ஒன்றை நடத்தினார். அன்றைக்கு ஆட்சியில் இருந்த கூட்டணிக் கட்சியான அதிமுகவின் அரசு அதற்கு அனுமதி மறுத்தாலும் மீறி அதை நடத்தி முடித்திருந்தார். திருச்செந்தூரில் நடந்த நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சவுகான் முதலிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

எல்.முருகன் ஏந்திய வேலைக் கீழே வைத்துவிட்டு ஒன்றிய அமைச்சர் பதவிக்குப் போனநிலையில், அவரின் கட்சியினர் அதை மீண்டும் ஏந்தி இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பின் மூலமாக ஏற்கெனவே ஏந்தியதுதான், இந்த வேல். அவரும்கூட மதுரையிலிருந்து பழனிக்கு அச்சமயம் வேல் நடை யாத்திரை நடத்த அனுமதிகோரினார். ஆனால் வழங்கப்படவில்லை. முப்பாட்டன் முருகன் என்று வெளிப்படையாக முருகனுக்கு உரிமைகோரிய முக்கிய அரசியல்வாதி அவர்தான்.

முத்தமிழ் முருகன் மாநாடு, பழநி

முருகர் என்ற சொல்லை பாஜக ஓர் அரசியல் ஆயுதமாக இங்கே ஏந்தப் பார்க்கிறதா, அதற்குத்தான் இந்த மாநாடா என்று தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்.  ”இந்து எதிர்ப்பு, அடையாளம், நம்பிக்கைகள் இவற்றுக்கு எதிராக அரசியல் செய்வதையே தம் அரசியல் ஆயுதமாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகளுக்கு எதிராகவே அந்த முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது எனக் கொள்ளவேண்டும். பெரும்பான்மையினர் சிதறுண்டே வாக்களிக்கிறார்கள் என்பதால் அவர்கள் நம்பிக்கைகளைப் பழிப்பது தவறு என உணர்த்தவே இந்த மாநாடு நடைபெற்றது. அது இந்துமுன்னணியால் நடத்தப்பட்ட மாநாடு, இனி பெரும்பான்மை மக்களைப் புண்படுத்தும்விதத்தில் பேசுவதற்கு வாய்திறப்பதற்கே யோசிக்கும்படி செய்வதற்காகத்தான் இது நடத்தப்பட்டது. முருகர் என்பது நம் தமிழர் நாவில் ஊறும் சொல். அந்த முருகரின் கோவிலில் ஒரு மதத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் அத்துமீறியதை அலட்சியப்படுத்திய திமுகவின் செயல் தவறு என்று சுட்டிக்காட்டியதே இம்மாநாடு.’’ என்று பதில் சொன்னார் அவர்.

முருகன் என்ற சொல் வெறும் சொல் அல்ல. அது ஓர் உணர்வு. நம் நனவிலி மனத்தின் மூலமாக இன்றும் வெளிப்படும் அளவுக்கு ஆதியானது. தென்புலத்தார் என்று குறளிலும் புறநானூற்றுப் பாடலிலும் குறிக்கப்படுவோர் தெற்கே வாழ்ந்த நம் குடி மூதாதையர்கள். அவர்களின் தலைவன்தான் முருகன். அவன் பிணிமுகம் என்கிற யானைமேல் பயணம் செய்கிறவன் என புறநானூற்றுப் பாடல் எண் 56 கூறுகிறது. எங்கு சென்றாலும் தமிழன் முருகனை உடன் கூட்டிச் சென்றுவிடுவான்.

புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் முருகவழிபாடும் சென்றுள்ளது. தமிழினம் இடம்பெயர்ந்துகொண்டே இருந்துள்ளது என்பதைப் ’போலச் செய்தல்’தான் காவடி தூக்குதல் என்ற கருத்துகளெல்லாம் ஆய்வாளர்களிடம் உள்ளது. தானியங்களையும் உணவுப் பொருட்களையும் மூங்கிலில் கட்டித் தோளில் தூக்கிச் செல்லுதல் குறிஞ்சி நிலத்தின் வழக்கம். குழந்தைகளுக்குப் பாலும் கொண்டுசெல்வார்கள். அதுவே பால்காவடி. இவ்வாறாக முருக வழிபாட்டின் பல்வேறு கூறுகளை நம் ஆதிச் சமூகத்தின் பண்பாட்டு வழக்கங்களின் எச்சமாகப் பார்க்கின்றவர்கள் உள்ளனர்.

இந்த முருகனை அரசியல் கட்சிகள் தொடுவதை பிற கட்சிகள் அச்சத்துடனே அணுகவேண்டி இருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் திருத்தணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதிலிருந்து தமிழக அரசே  முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னின்று நடத்தியதுவரைக்கும் எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வதாகக் கொள்ளலாம். வட இந்திய அரசியல் என்றால் இதை ’மென் இந்துத்துவா’ என்று கட்டம் கட்டிவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் அரசியலில் மதம் கலப்பது என்பது ஆரம்ப கட்டத்தில் இருக்கத்தான் செய்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட அரசியலில் காந்தியே அனைத்து மதப் பிரார்த்தனைக் கூட்டங்களை ஓர் அரசியல் ஆயுதமாகத்தான் வடிவம் கொடுத்தார் எனலாம். ’வைஷ்ணவ ஜனதோ’ என்கிற குஜராத்திப் பாடல் நிஜமான வைணவர்களின் குணங்களைச் சொன்னது. இதை காந்தி பிரபலப்படுத்தினார். பஜனைக் கூட்டங்கள் நடத்துவது என்பதை காந்தியவாதிகள் அன்றைக்குக் கடைப்பிடித்தார்கள்.

“1960களில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இராமாயண உபன்யாசம் திருமுருக கிருபானந்த வாரியாரால் நடத்தப்பட்டது. ஏராளமான கூட்டத்தினர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். இருபது நாள்கள் கோலாகலமாக நடைபெற்றது. காமராஜர் உச்சகட்ட செல்வாக்குடன் இருந்த நேரமல்லவா? எப்போதாவது உபன்யாசம் கேட்க காமராஜரும் வருவார். அவர் வரும் வேளையில் வாரியாரும் இராமாயணத்திலிருந்து அவர் வருகைக்குப் பொருத்தமான நிகழ்வைச் சொல்லி மகிழ்விப்பார். இந்த கூட்டத்தைக் கண்டு திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது. மதத்தைப் பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யும் காங்கிரஸ் உத்தி இங்கே எடுபடாது என திராவிட நாடு ஏட்டில் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 1967 தேர்தலில் திமுக கூட்டணியிடம் காங்கிரஸ் தோற்றுப்போனது. திமுக அஞ்சியிருக்கவேண்டிய தேவையே எழவில்லை!’ என நினைவுகூர்கிறார் பத்திரிகையாளர் ராவ்.

அதன் பின்னர் மத்தியில் இந்திராவின் வலிமையான ஆட்சி ஏற்பட்டது. 1971-இல் பெரியார், சேலம் கடவுள் மறுப்பு மாநாட்டில் இந்துக் கடவுளரை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தி அதுவே தேர்தல் பிரச்னையாகவும் மாறியது. ஆனால் பெரியார் ஆதரவு பெற்ற கலைஞர்- இந்திரா கூட்டணியே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மிகப்பெரிய கவர்ச்சிவாய்ந்த தலைவர்களின் காலம் கால் நூற்றாண்டுக்கும் மேல் நிலவியது. அதனால் எவ்வித மதச்சாய பிரச்சாரங்களும் எடுபடவில்லை. தலைவர்கள் வழிபாடே பெரிதாகக் கோலோச்சியது என்று சொல்லிவிடலாம்.

“தமிழ்நாட்டில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவ்வளவு கோயில்கள், பக்தர்கள் இருந்தும் நம்மால் தனியாக நின்று சட்டமன்றத் தேர்தலில் சாதிக்க முடியவில்லையே என்ற கவலைதான் பாஜகவுக்கு உள்ளது. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை இதன் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். இந்து வாக்கு வங்கியைத் திரட்ட ஏற்கெனவே பலர் செய்த முயற்சிகள் தோற்றுத்தான் போயிருக்கின்றன.” என கருத்து தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதால், மீண்டும் சக்கரம் சுழல்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதை அரசியல் வட்டாரங்களிலும் உணர்ந்திருக்கிறார்கள்தான்! வேல் ஆயுதம் என்பது அரசியல் ஆயுதமாக ஆகுமா? இல்லை, எல்லோரும் ஏந்தத் தொடங்கிவிடுவதால் அதன் விளைவுகள் என்னவாகும்? ’இந்த அரசியலை சமாளிக்கத்தான் எல்லாவற்றையும் சேகர்பாபு பார்த்துக்கொள்வார் என்று இருக்கிறார்களோ?’ என்கிறார் அரசியல் நோக்கர் ஒருவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram