விசிக தலைவர் தொல். திருமாவளவன் 
அரசியல்

‘ஏன் நீல நிற கோட் சூட் அணிந்தோம்..?’

தா.பிரகாஷ்

திருச்சியில் நேற்றுமுன்தினம் (ஜூன் 14) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ பேரணி நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட ஏராளமானோர் நீல நிற கோட் சூட் அணிந்து பங்கேற்றனர். இத்துடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி எழுந்த விமர்சனம் குறித்து வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் கெளதம சன்னாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

நீங்கள் உட்பட பலரும் நீல நிற கோட்டுடன் பேரணியில் கலந்துகொண்டீர்கள். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

காந்தி கோவணத்தோடு இருந்தாலும் இந்தச் சமூகம் அதைப் பெருமையாகவே பார்க்கும். ஆனால், தலித் ஒருவர் அப்படி இருந்தால், அது அவர்களின் இயல்பு என சொல்லி ஒதுக்குவார்கள். இந்த காரணத்துக்காகத்தான் அம்பேத்கர் கோட் அணிந்தார். இதைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அம்பேத்கரே நடந்துவருகிற மாதிரி காட்டவும் கோட் சூட் போட்டு வாருங்கள் என தலைவர் திருமா அழைப்பு விடுத்திருந்தார். பேரணியில் ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் கோட் சூட் போட்டு வந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் நீல நிற கோட் அணிந்து வந்திருந்தார்கள்.

திருமாவளவனுடன் கெளதம சன்னா

பேரணிக்காக கோட் சூட் அணியச் சொல்லி ஏழை எளிய மக்களின் பணத்தை விசிக விரயமாக்குகிறது என்கிற விமர்சனத்தைக் கவனித்திருப்பீர்கள்...

இந்த விமர்சனம், மேலோட்டமாகப் பார்த்தால் சரியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், எளிய மனிதர் ஒருவர் கோட் சூட் போட்டால் மன ரீதியான மாற்றத்தை உணர்வார். நானும் இப்படியொரு உடை அணிந்து தைரியமாக நடமாட முடியும், கூச்சத்தை உடைக்க முடியும் என்பதைக் காட்ட இப்படியொரு முன்னெடுப்பு தேவை.

படித்தவர்களும் பணக்காரர்களும் உடுத்துகின்ற உடைதானே கோட். இது அதிகாரத்தின் குறியீடாக உள்ளது. அதை உடைத்து, சாதாரண மக்கள் அணிவதன் மூலம், அவர்களை உளவியல் ரீதியாக அதிகாரப்படுத்தவே இந்த ஒரு ஏற்பாடு.

இனி, அவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் கோட் அணிந்து செல்வார்கள். அதிகார மட்டத்தை ஏறக்குறைய சமப்படுத்துவதற்கான ஒரு குறியீட்டு முயற்சிதான் இது.

பேரணியில் 5 லட்சத்திலிருந்து 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கொஞ்சம் வசதியான தோழர்கள்தான் கோட் சூட் அணிந்து வந்தார்கள். இதனால் என்ன பொருளாதார இழப்பு? கலந்துகொண்ட அனைவரும் கோட் அணிந்து வரவில்லையே. அதனால், இப்படியான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவும் ஏற்பட்டைப் பலரும் விமர்சித்திருந்தனர். காரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் கட்சி ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சியில் செயல்பாட்டை நகல் எடுப்பதாக விமர்சித்தார்களே…?

மாவட்டச் செயலாளரான சைதை ஜேக்கப் சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் செய்தது இது. இதை அவர் தன்னிச்சையாகவும் தலைமைக்குத் தெரியாமலும்தான் ஏற்பாடு செய்தார். காவல் துறையிடம் அனுமதிக்குச் சென்றபோதுதான் இது தலைமைக்குத் தெரியவந்தது. இருந்தாலும் மலர் தூவும் ஏற்பாட்டுக்குத் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இந்தப் பேரணிக்கான திட்டமிடுதல் தொடங்கியபோதே தலைவரிடம் அப்படியொரு திட்டம் இல்லை. தலைவர் திருமாதான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்ததாக வந்தது தவறான செய்தி.

கூட்டணியிலிருந்தும் நாம் பேரணி நடத்த அனுமதியில்லை; பல இடங்களில் கொடியேற்ற, பொதுக் கூட்டம் நடத்த முடியவில்லை என மேடையிலேயே திருமா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திமுக நெருக்கடி கொடுக்கிறதா?

திமுக கூட்டணியில் இருக்கும்போது மட்டுமில்லை; அதிமுக கூட்டணியிலிருந்தபோதும் இந்த நெருக்கடி இருந்தது.

திமுகவுடனான கூட்டணி என்பது அரசியல் ரீதியான கூட்டணிதானே தவிர; ஆட்சி அதிகாரத்தில் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு, ஒவ்வொரு கட்சியும் அவர்களின் செயல்திட்டங்களில் அடிப்படையில் சுதந்திரமாகச் செயல்படுவார்கள். அதேமாதிரிதான் விசிகவும்.

திமுகவுடன் – விசிக தேர்தல் கூட்டணியில் இருக்கிறது என்ற காரணத்துக்காக எங்களுக்கு உடனே அனுமதி கொடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

விசிகவின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் என அனைத்தும் அரசு நிர்வாகத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும். இதை சில அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கின்றனர். இந்த அடிப்படையில் எங்களுக்கு நிறைய முட்டுக்கட்டைகள் வருகின்றன. இப்படியான தடைகள் அரசியல் ரீதியானதாக மாறும்போது தலைவர் நேரடியாக முதல்வரைச் சந்தித்து பேசி சரிசெய்கிறார். ஆனால் நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை நாங்களும் நிர்வாகரீதியாகத்தான் எதிர்கொள்கிறோம். கூட்டணியில் இருப்பதாலேயே விசிகவுக்கு எல்லாவிதமான அனுமதியும் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், விசிக எப்போதும் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி இயங்கும் கட்சி. எந்த மட்டத்திலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் கட்சியாக விசிக உருவெடுத்துள்ளது.

சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள் என விஜய் பெயரைக்கூட சொல்லாமல் திருமா விமர்சித்துப் பேசியிருக்கிறார். விசிக ஆதரவாளர்கள் தவெக பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

பல நடிகர்கள் தங்களின் சினிமா புகழை அரசியலில் முதலீடாகப் பயன்படுத்துவதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் இயக்கங்களுக்கு உள்ளது.

தங்களின் சினிமா புகழைப் பயன்படுத்தி மக்களிடம் உள்ள ஏற்றத்தாழ்வை, முரண்பாட்டைக் களைய எந்த முயற்சியையும் இவர்கள் எடுப்பதில்லை. இதில் விஜய்யும் அடக்கம். நான் நேராக முதலமைச்சராகத்தான் வருவேன் என்கிறார். கொள்கையோடும் செயல்திட்டத்தோடும் செயல்படுகின்ற தலைவர்களுக்கும் இயக்கங்களுக்கும் இவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. சினிமாக்காரர்களை சினிமாக்காரர்களாகப் பாருங்கள். அரசியல் தலைவர்களை அரசியல் தலைவர்களாகப் பாருங்கள் என்பதை உணர்த்தவே, தலைவர் திருமா இப்படி பேசினார். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது.