Lawrence Rajini 
அரசியல்

டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸின் உடான்ஸ்… விஜய்யிடம் எடுபடுமா?

Staff Writer

நீண்டநெடுங்காலமாகவே ரஜினிகாந்தின் வெறிகொண்ட ரசிகராக அலைந்து திரிந்து, சமீபகாலமாக விஜய்யின் நெருங்கிய நண்பர் என்று தன்னை அறிவித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராகவேந்திரா லாரன்ஸ், அடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை இலக்கு வைத்து நகர்த்தி வரும் காய்கள் திரையுலகினர் பலரை குறிப்பாக ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸின் ரஜினி பக்தி உலகறிந்தது. தானும் ஒரு சக ஸ்டார் என்கிற இறுமாப்பு துளியும் இல்லாமல் ஒரு கடைநிலை ரஜினி ரசிகராகவே இவ்வளவு காலமும் பயணித்து வந்தவர். ரஜினியின் நேரடி தரிசனம் கிடைத்தால் அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குபவர். அப்படிப்பட்டவர் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மனமாற்றம் ஏற்பட்டு விஜய் ரசிகராக மாறியுள்ளார்.

சமீபத்தில் விஜய் குறித்து பேசியுள்ள அவர், “ எனக்கு சினிமாவில் நண்பர்கள் என்று யாருமே கிடையாது. எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் விஜய் சார் மட்டும்தான். எனக்கு சின்ன காயம் ஏற்பட்டால் கூட என்னாச்சு நண்பா ? என்று அக்கறையாக விசாரிப்பார்” என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி திருச்சி கிழக்கு தொகுதியை அவர் குறி வைத்திருப்பது தவெகவினருக்கே பெரும் அதிர்ச்சி செய்தியாகியிருக்கிறது. இது குறித்து தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் லாரன்ஸ்,…

திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஊகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.

தற்போது நான் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணிகள் வரும் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இந்த உலகமே ஆதரவாக இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை இதன் மூலம் லாரன்ஸ் உருவாக்கி வருகிறார்.

அறக்கட்டளைகள் மூலம் மக்களுக்கு உதவி வருவதாக , ஆயிரம் ரூபாய் செலவழித்தால் கோடி ரூபாய்க்கு விளம்பரம் தேடும் மனோபாவம் கொண்ட லாரன்ஸ் என்பது ஊரறிந்த உண்மை. விஜய்க்கு மட்டும் இது தெரியாமல் இருக்குமா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram