தி.மு.க. கூட்டணியில் நீடித்துக் கொண்டிருக்கும் தொகுதி ஒதுக்கீடு ஒருவழியாக படிப்படியாக முடிவை நோக்கி நகர்கிறது. காங்கிரஸ் கட்சி,தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவைதாம் தங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் முடிவை எட்ட முடியாமல் இருந்தது.
கடந்த இரண்டு நாள்களாக மூன்று கட்சிகளின் தலைவர்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் அக்கட்சிக் குழுவினருடனும் தொகுதிகளைப் பற்றிப் பேசிவருகின்றனர்.
காங்கிரஸ், தே.மு.தி.க. இன்னும் இழுபறியாக நீடித்துவருகிறது.
இன்று காலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான அக்கட்சிக் குழுவினர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். அதில் அக்கட்சிக்கான தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டன. அதற்கான உடன்பாடும் கையெழுத்தானது.
பின்னர் வெளியே வந்த சண்முகம், செய்தியாளர்களிடம் இதை உறுதிப்படுத்தினார்.
இரண்டுமூன்று மணி நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு மாலையில் ஸ்டாலின் மொத்தப் பட்டியலையும் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
மற்ற பல கேள்விகளுக்கு அவர் நாசூக்காக பதில்கூற மறுத்துவிட்டார்.