தேர்தல் 2026

ஆ.இராசா மீது கோபத்தைக் காட்டுங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி குத்தல்!

Staff Writer

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கருணாநிதியின் கடைசிக் கால சர்ச்சை குறித்து அவர் மீண்டும் பேசினார். 

“ ஸ்டாலின் நெல்லையில் கோபத்தைக் கக்குகிறார், எரிச்சலை வெளிப்படுத்துகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக இபிஎஸ் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாகச் சொல்கிறார்.

நான் பேசியதை நன்கு கேளுங்கள். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச்செயலாளர் ஆ.இராசாவிடம் காட்டுங்கள். அவர்தான் ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார், அது இந்தியா அளவில் வைரலாகிறது. அதைத்தான் நான் சொன்னேன், என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்..? இராசா மீது கோபப்பட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால் பயம்.

இராசா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது நியாயமா..? உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினாரே, அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்ததாக இராசா சொல்கிறார். அழகிரியும் சொல்றார். (அழகிரி பேசியதற்கு ஆதாரம் காட்டுகிறார்) இராசா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும். ஸ்டாலின் பேசப்பேச அது, உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள், தங்கையை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டீர்கள். உங்க அப்பா கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை, அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆ.இராசா ஆடியோ செய்தியை விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்க அம்மா(ஜெயலலிதா) இறந்தபோது என்னவெல்லாம் பேசுனீர்கள்..?

2021 தேர்தலில் 22வது வாக்குறுதியில் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவித்திருந்தீர்கள். இப்போது நான் சொல்கிறேன், கலைஞர் அவர்களை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள்.” என்று பழனிசாமி பேசினார்.