சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய தமிழகம் கட்சியின் 43 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கோவையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரண்டாவது பட்டியலை வெளியிட்டார்.
அதில், 27 பேர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, அ.தி.மு.க. அணியில் பேச்சுவார்த்தை முடிவடையாததால் தனித்துப் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி கூறியிருந்தார். ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, 33 தொகுதிகளில் போட்டியிட்டு 31 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வாங்கிய கட்சிக்கு எப்படி அதிக இடங்கள் ஒதுக்கமுடியும்? அந்தக் கட்சியுடன் கூட்டணியே பேசவில்லை என்றெல்லாம் சொன்னார்.
அதற்கு கிருஷ்ணசாமி மறுப்பு தெரிவித்ததுடன், அ.தி.மு.க. அணியைவிட தங்கள் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றதாக புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.
தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளைக் கணிசமாக வைத்துள்ளதாகக் கூறப்படும் ஜான்பாண்டியனின் த.ம.மு.க. கட்சி போட்டியிடும் இராஜபாளையம் தொகுதியில் வழக்குரைஞர் இரமாதேவி புதிய தமிழகம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, தூத்துக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, திருவையாறு, தாராபுரம், திண்டுக்கல், ஆலங்குளம், பெரம்பலூர், அந்தியூர், சென்னை பல்லாவரம், ஆலந்தூர், பழனி, லால்குடி, மணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, துறையூர்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி போட்டியிடும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்,
மடத்துக்குளம், அணைக்கட்டு, திருப்பரங்குன்றம், நத்தம்,
விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு புதிய தமிழகம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.