தேர்தல் 2026

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் 11 கோரிக்கைகள்!

Staff Writer

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொருட்களை மட்டுமே தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என  பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 

அதன் விவரம் : 

”1. பதாகைகள், வாசல் தோரணங்கள், போஸ்டர்கள், தட்டிகள், மற்றும் பிற பிரச்சார உபகரணங்கள் தயாரிக்க PVC, ஃப்ளெக்ஸ், நைலான், கொரியன் துணி, பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பொருட்கள் முழுவதுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். மாற்றாக, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த 100% பருத்தித் துணி அல்லது பருத்தி-காகித கலவையில் தயாரிக்கப்பட்ட பதாகைகளும், மறுசுழற்சி செய்யக்கூடிய போலி எத்திலீன் தாள்களும் பயன்படுத்தப்படலாம். அலங்காரத்திற்கு பயன்படுத்தும் கொடி, தோரணங்கள் முழுவதுமாகப் பிளாஸ்டிக் இல்லாததாக இருக்க வேண்டும்.

2. தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து அலுவலக தேவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

3. பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், வீதி நடைகள், பேரணிகள், மக்கள் சந்திப்புகள் என எல்லாவற்றிலும் — தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் (disposable) பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

4. ஒலி மாசுவைக் குறைக்க சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரி இதைக் கண்காணிக்க வேண்டும்.

5. வாக்கெடுப்பு முடிந்தவுடன் அனைத்து பதாகைகள், வாசல் தோரணங்கள் மற்றும் பிரச்சார உபகரணங்களைக் கட்சிகளே அகற்றி, வகைப்படுத்தி, உரிய மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைத்து அறிவியல்பூர்வமாக மறுசுழற்சி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

6. அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிமனைகளில் — பிளாஸ்டிக் அலங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். 

7. தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு வழங்கும்போது  பிளாஸ்டிக் கொள்கலன்கள், தட்டுகள் தவிர்த்து, இரும்பு தட்டுகள் மற்றும் கண்ணாடிக் கோப்பைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

8. பிரச்சார வாகனங்களை அலங்கரிக்க PVC, பிளாஸ்டிக், தெர்மோகோல் முழுவதுமாகத் தவிர்த்து — பருத்தி துணி, காகிதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

9. ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

10. மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

11. காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடை ஏற்படுத்திக் குப்பைகளை அதிகளவில் உருவாக்கும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.”