துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தேர்தல் 2026

தேர்தலுக்குள் 2 முறை இளம் வாக்காளர்களைக் கவர உதயநிதி திட்டம்!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்குள் இளம் வாக்காளர்களை இரண்டு முறை சந்தித்து வாக்குக் கேட்க தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி திட்டம் தீட்டியுள்ளார். 

இதற்காக 10 வாக்காளர்களின் பெயர்கள், அவர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய விவரங்களைச் சேர்க்கும்வகையில் அட்டவணை ஒன்றும் அச்சிட்டுத் தரப்படுகிறது.

“ தி.மு.கழகத்தின் முதன்மை அணியான தி.மு.க. இளைஞர் அணிக்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகளிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். சட்டமன்றத் தேர்தலில், கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு '#களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.

ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் நாளான 23.04.2026-க்குள் இரண்டு முறை வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார்கள்.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்ற உறுதியுடன் நம் மாநிலத்தின் உரிமைகளை, டெல்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் அடிமைகளின் எண்ணத்தை மக்களிடம் எடுத்துரைப்போம், அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!” என்று உதயநிதி தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.