நீதிபதி பிரபா ஶ்ரீதேவன் அவர்களின் நேர்காணலில் தெரிவித்துள்ள ஒவ்வொரு கருத்துக்களும் முத்தாய்ப்பானவை. நடைமுறை சாத்தியமாகக் கூடியவை. குறிப்பாக, ‘உனக்கு உன் பெற்றோர்... எனத் தொடங்கி, உனக்கான சுயமரியாதை, மற்றும் உனக்கு செய்துகொள்ளும் பேருதவி ' என்று சொன்னது, மிக உன்னதமான அறிவுரை. இது விலைமதிப்பில்லாத அறிவுரை. ஜெயராணியின், " வீட்டிற்கு வர தாமதமானால்...." கட்டுரையில், 'மகளை வளப்பதற்காக உறவினர்களோடு முரண்படுவதையும், கவனமாகத் தவிர்த்து விட்டேன். அதனால் அவளுக்கு எல்லா சொந்தங்களும் கிடைத்தது....' என்ற அனுபவ வரிகள், பணிக்குச் செல்லும் எல்லா தாய்மார்களும் குறித்துக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு உறவுகளை பரிசாக தர உகந்தது.
ந. செளந்தரராஜன், புழுதிவாக்கம்
உருக்கம்
முதிர்ச்சியும் அனுபவமும் எப்போதும் சிறப்பாகச் செயல்படுவது, எதிரியை ஆட்டங்காண வைப்பது என்பதைத் தெளிவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தியது பெருமாள் முருகனின் மிரட்டல் சிறுகதை. கதையிலுள்ள “வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் முடிவதில்லை” என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது. தான் ஒரு தேர்ந்த பேனாக்காரர் என்பதைத் திறமையாக நிரூபித்திருக்கிறார் பெருமாள் முருகன். கதையின் கடைசி வரி சரியான முத்தாய்ப்பு!
முத்து வள்ளிமயில், முத்தரசநல்லூர்
பாராட்டு
பெண் குழந்தைகள் பற்றிய நவம்பர் மாத சிறப்பிதழை படிக்க சிறப்பாக இருந்தது. ஆசிரியருக்கு பாராட்டுகள். இலக்கிய கட்டுரைகள் படிப்பதற்கு அருமையாக இருந்தது.
எஸ். பரமேஸ்வரி, திண்டுக்கல்
வெளிச்சம்
சுகதேவின் கட்டுரை இளையராஜா தம் இசைச் சாதனைகளால் எப்போதும் இமயமான இளைக்காத இசை ராஜாதான் என்பதை பல்வேறு கோணங்களில் பல்வேறு தரவுகளால் மெய்ப்பித்தது. அனுபவம், திறமை இரண்டும் கை கோர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது நீதிபதி பிரபா தேவன் நேர்காணல். பல உண்மைகளின் மேல் வெளிச்சம் காட்டி நடப்புலகை நம் முன் தெளிவாகக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
மேலை. தமிழ்க்குமரன், மேலைச்சிவபுரி
வாழ்த்து
இணையில்லா எழுத்துகளை இடைவிடாமல் எங்களுக்கு தரும் அந்திமழை தவப்புதல்வர்களுக்கு அற்புத வாழ்த்துகள்.
கா. சித்ரா காமராஜ், கோவை
சிறப்பு
பெண் குழந்தைகள் சிறப்பிதழ் அருமையாக உள்ளது. குறிப்பாக கலாப்ரியா (மகளிரோடு சேர்ந்து கொண்டார்).
அ.வெண்ணிலா, சு. தமிழ்செல்வி இவர்களது குடும்பத்தை அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஏனையோரது கட்டுரைகளும் சிறப்பு.
நீதிபதி பிரபா ஶ்ரீதேவன் கட்டுரையும் சிறப்பாக அமைந்துள்ளது.
ந மனோகரன், சிங்கை, கோவை
முதிர்ச்சி
பெண் குழந்தைகள் இதழில் இடம்பெற்றிருக்கும் பல்துறை பெண் ஆளுமைகளின் அனுபவக் கட்டுரைகள் அனைத்தும் நன்று. தமிழ்நாட்டுக்கு வரும் எஸ்.ஐ.ஆர். கட்டுரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகளைத் தேர்ந்து தொகுத்தளித்திருப்பது பாராட்டுக்குரியது. தன்னாட்சி உரிமை பெற்ற தேர்தல் ஆணையம் இது சார்ந்து அளித்திருக்கும் பதில்கள், பல்வேறு அரசியல் நடுநிலையாளர்களின் எண்ணங்களை திருப்திப்படுத்தவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
நடிகர், இயக்குநர் என இயங்கிக் கொண்டிருக்கும் திரைக்கலைஞர் பிரதீப் ரங்கநாதனைப் பற்றி பிஸ்மி, திருப்பூர் சுப்பிரமணியன், கேபிள் சங்கர் ஆகியோர் தங்களின் கருத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தெரிவித்திருப்பது நன்று. ஆண் வாரிசாக வரவேண்டும் என்று ஏங்கி, பெண்களைப் பெற்ற அனைவரும் படிக்க வேண்டிய பெண் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகள் அத்தனையும் வரலாறு. பசுமைத்தாயகம் செளமியா அன்புமணி, இறைவி, ஜெ. தீபலட்சுமி, கலாப்ரியா,
அ. வெண்ணிலா, நீதிபதி பிரபா தேவன், சு. தமிழ்ச்செல்வி உட்பட்டவர்களின் அனுபவங்கள் முதிர்ச்சி பெற்றவை எனில் மிகை அல்ல.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
வெல்லட்டும்
எஸ்.ஐ.ஆர். பற்றி பல தலைவர்களின் கருத்துகள் அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. தேர்தல் ஆணையத்தை முதலில் நம்ப வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கட்சி தொண்டர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகள் நியாயமாக மேற்கொள்ள பக்கபலமாக இருக்க வேண்டும். வைக்கம் போராட்டம் நினைவாக தேன்மொழிக்கு விருது அறிவித்திருப்பது பொருத்தம்.
வாசிப்பு, பிரியா பவானி சங்கரை ஒரு சிறந்த நடிகையாக மாற்றியிருக்கிறது. அவர்களது முயற்சி வெல்லட்டும். செஸ் போட்டியில் சர்வாணிகா உலகம் சாம்பியன் பட்டம் வெல்லட்டும். அவரது தாய் – தந்தை புகழுடையவர்கள். அதேபோல், வில்வித்தையில் சஞ்சனா சாதனை படைத்துள்ளார்.
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
நன்றி
சிம்பொனி இளையராஜா கட்டுரை படித்தேன். முதலில் மூன்று பேருக்கு நன்றி செல்ல வேண்டும் இந்திய பிரதமர், தமிழக முதல்வர், அந்திமழை குடும்பம். பண்ணைபுரம் முதல் சிம்பொனி வரை அவர் பயணித்த பயணம் யாரும் பயணம் செய்ய முடியாத இசை பயணம். அவர் இயற்றிய சிம்பொனி குறித்து பல தளங்களில் தீவிரமாக உரையாடல் நடத்தப்பட வேண்டும். எனக்கு சங்கி என்ற வார்த்தை புரியவில்லை. இளையராஜா என்ற தமிழன் தேர்ந்த அரசியல்வாதி அல்ல, சமயத்திற்கு தகுந்த மாதிரி பேசி காரியம் சாதித்து கொள்ள. அவர் சாதித்தது, அவருடைய ரசிகர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டது மட்டும்தான். அவருக்கு தமிழக அரசு விழா எடுத்தது. சிறப்புக்குரிய விஷயம் .
பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
மூக்குடைப்பு
50 ஆண்டுகால இசைப் பயணத்தில் 1500-ஐ தாண்டும் படங்களில் 8,600 பாடல்கள் என்பது முன்னும் பின்னும் யாரும் நெருங்க முடியாத தடம் என்று சுகதேவ் பெருமிதமாக சொன்ன சவால், ராஜாவை குறைத்து மதிப்பிடுபவர்களின் மூக்கை உடைத்தது.
அ. யாழினி பர்வதம், சென்னை
அவசியம்
வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும் என்பார்கள் அரசியல் + சினிமா + இலக்கியம் என்று எத்தனைப் பிரிவிலும் சிறப்பிதழில் அசத்தும் அந்தி மழை 'பெண் குழந்தைகள் சிறப்பிதழ்' என்று சீஸனுக்கேற்ற ரீசனோடு தொகுப்பை வழங்கியிருப்பது அவசரமும் + அவசியமும் நிறைந்தது !
எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு
நவரசம்
'மிரட்டல்' சிறுகதை இலக்கிய நயத்துடன் காதல் பரிமாறல் கலந்து நகைச்சுவையாகத் தெறிக்கவிடப் பட்டுள்ளது ஒன்பது பக்கமும் நவரசம் சொட்டுகிறது!
மருதூர் மணிமாறன், இடையன்குடி
குளுமை
"சிம்பொனி திரைப் பொன்விழா" இளைய ராஜா என்ற சிறப்புக் கட்டுரை கண்களுக்கும் கருத்துக்கும் குளுமை ஊட்டியது போல் உள்ளது பிரதமரும் முதல்வரும் கொண்டாடினாலும் கூட அனைவராலும் கொண்டாடக் கூடியவர் இளையராஜா என்ற வகையில் அரசியல் லாப நட்டக் கணக்கை மறந்து விடலாமே!
என்.ஜானகி.ராமன், செல்வமருதூர்
பத்தவெச்சுட்டியே
என்னது! பிரதீப் ரங்கநாதன் அடுத்த ரஜினியா!?! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்கப்பா. இதையே பிரதீப் நம்பிட்டார்னா அவருக்குத்தான் ஆபத்து. இப்படித்தான் அடுத்த எம்ஜிஆர் என்று அரசியலில் கே. பாக்யராஜையும், சினிமாவில் ராமராஜனையும் காலி பண்ணினாங்க. ஐந்து படம்கூட ந(மு)டிக்காத பிரதீப் இன்னும் ஐந்து வருஷம் நீடிப்பாரா! என்று பார்க்கிறதுக்குள்ள பரபரப்புக்காக பத்த வச்சுட்டியே....பரட்டை.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை