கடிதங்கள்

கருத்துக் கருவூலம்

Staff Writer

முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் என்னும் டாக்டர் விஎஸ் நடராஜன் அவர்களின் கட்டுரை காலத்திற்கேற்ற படைப்பாகும். நடராஜன் முதியோருக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். முதியோருக்கு எதிராக தினந்தோறும் இழைக்கப்பட்டு வரும் குற்றங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. முதியோர் நலனின் தமிழக அரசு காட்டி வரும் ஆர்வம் போதாது. ஒவ்வொரு முதியவரையும் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும். கவிதா பாரதியின் புலியிசைப் பாடகர் என்னும் தலைப்பில் தேனிசை செல்லப்பாவைப் பற்றிய கட்டுரை அருமையும் அருமை. தேனிசை செல்லப்பாவை உலகிற்கு அடையாளம் காட்டிய அந்திமழைக்கு நன்றி. ‘சாகிர் உசேன்’ இசையழகன் என்னும் ஷாஜியின் கட்டுரையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மணாவின் சிறப்புப் பக்கங்கள் உண்மையில் சிறப்புப் பக்கங்களே! அந்திமழையை கருத்துக் கருவூலமாக வெளியிட்டு வரும் ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

சிறப்பு

கடந்த இதழில் தமிழ்நாட்டில் 25 ஆண்டு கால அரசியல் நிலை விமர்சிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா சாதிக்கக் கூடியவர். டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியவர்களுக்கு வழங்கியுள்ள யோசனைகள் அத்தனையும் சிறப்பு.

உலக செஸ் சேம்பியன் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றது இந்திய நாட்டிற்கு பெருமை. புலியிசைப் பாடகர் செல்லப்பா எங்கள் ஊர் பக்கத்தில். நான் அவரை சந்திக்காமல் போனது வேதனை. அந்த ஊர் மக்கள் கூட அவரைக் கண்டுகொள்ளாதது பெரும் துயரம். விடுதலைக்கும் தமிழுக்கும் பாடுபட்ட கவிஞரை நாடு மறந்துவிட்டது. அவரைப் பற்றி எழுதியதற்கு நன்றி. அறியாத பல செய்திகள் அந்திமழையில் வந்திருக்கின்றன.

‘காலமும் பொறுமையும் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு போர்வீரர்கள்’ என்ற டால்ஸ்டாயின் வார்த்தைகள் எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகின்றன.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான செய்திகளை வஞ்சகமில்லாமல் பதிவு செய்துள்ளனர். ராமதாஸ் – திருமாவளவன் உறவு, பிரிவு சிறுவயதில் கேட்ட எலி – தவளை கதையை நினைவுபடுத்துகிறது.

இமையத்தின் புத்தகத் தேர்வு சிறப்பு. வெண்முரசு நாவலில் மகாபாரதம் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

திறமையும் சறுக்கலும்

கால் நூற்றாண்டு தமிழகத்தை காண வைத்த அந்திமழை ஆசிரியர் குழுவினருக்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். அரசியல், சினிமா, க்ரைம், இலக்கியம் என்று சோடை போகாத அரிய தகவல்கள், நடுநிலை எனும் முத்திரை பதிக்கும் கட்டுரைகள் எனில் மிகையில்லை!

பாலா 25 வணங்கப்பட்டவன் முதல் வணங்கான் வரை கட்டுரை அருமை. உயர வைத்த அதிரடிக் காட்சிகளையும் அழகியல் பிம்பங்களையும் காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்த இயக்குநர் பாலாவின் திறமைகளையும் சறுக்கல்களையும் ஆய்வு நோக்கில் அலசி எழுதியிருக்கும் மிஸ்டர் முள், குத்தாத முள்ளாக மனதில் நிற்க வைத்திருக்கிறார்.

ஸ்டார்களுக்குப் பின்னால் ஓடி கோடிகளில் சம்பாதிக்க ஆசைப்படாத ஒரு ரோசக்கார இயக்குநர் பாலா எனும் கட்டுரையாளரின் பதிவு திரை உலகத்தின் பிதாமகன் பாலா என்பதை நிறுவுகிறது. தொடர்க…வெல்க..!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

பாராட்டு

இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது திரைப்பாடல். இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வந்தாலும், பெண்களுக்கோ அதிக அளவு ஆசை வரும். இகழ்வதுபோல் புகழ்வது என்பது இலக்கியத்தில் அங்கதம் என அழைக்கப்படும்.

வடகாசியும் முத்துமாரியும் தத்தமது கணவனின் குணநலன்களை மாற்றி மாற்றி இகழ்வது போல் புகழ்வதே அகிலாண்ட பாரதியின் “எங்க அண்ணனும் உங்க அண்ணனும்” சிறுகதை.

இருவரது உரையாடல்களையும் கேட்ட முப்பிடாதி அம்மனின் குழப்பம் படிக்கின்ற வாசகர்களுக்கும் ஏற்படவே செய்யும்.

கிருஷ்ண பரமாத்மாவை அண்ணனாகக் கொண்ட அம்மன் கீதையின் வாசகங்களைக் கொண்டு கதையை முத்தாய்ப்பு செய்திருப்பது நன்று. சிறுகதைக்கே உரிய உருவம், உள்ளடக்கம், யுக்தி ஆகிய கூறுகளோடு அமைந்துள்ள சிறப்பான பாராட்டிற்குரிய சிறுகதை.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

மக்கள் ஆதரவு

கால் நூற்றாண்டு தமிழகம் குறித்த சிறப்புப்பக்கங்கள் மீண்டும் பழைய நிகழ்விகளை அசைபோட்டுப் பார்க்க உதவியது. பாலா 25 கட்டுரை சிறப்பாக இருந்தாலும் அவர் இன்னும் புதிதாக யோசிக்க வேணடும். ஒரே பார்முலாவிலேயே கதை சொல்வது எரிச்சலைத் தருகிறது. நடிப்பைச் சொல்லிக் கொடுப்பதில் இருக்கும் கவனத்தைப் போல கதையிலும் கவனம் செலுத்த வேண்டும்.பிதாமகன் - நான் கடவுள் இரண்டின் கலவையாகத் தான் வணங்கானைப் பார்க்க முடிந்தது. கதைக்களம் மாறினால் மட்டும் போதாது கதையும் மாறவேண்டும்.

நந்தவனம் சந்திரசேகரன்

திருச்சி

இசையழகு

"சாக்கிர் உசேன் எனும் இசையழகன்" என்ற ஷாஜியின் தொகுப்பு ஆத்மார்த்த ரசிப்பாகி விட்டது. 1996ல் வெளியான இந்தியன் படத்தின் 'டெலஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?" என்ற பாடலின் வரிகளைச் சுட்டிக் காட்டி அருகில் உசேன் என்ற அந்த கெட்டிக்கா ரை தப்லாவுடன் பிரகாசிக்க வைத்து சமீபத்தில் அவர் மறைந்தாலும் மறையாத அவரது இசையழகை இதயங்களில் வரைந்து விட்டார் ஷாஜி!

ஆர். உமா காயத்ரி மணலிவிளை

பார்ப்போம்

அந்திமழை ஜனவரி 2025 இதழில் அதிமுக இருமுறை தொடர் வெற்றி கட்டுரை படித்தேன். கர்நாடக சிறையில் ஜெ.வை அடைத்ததில் எனக்கும் ஆத்திரம் வந்தது ஒரு குறு விவசாயியாக. கண்ணீர் விட்டு கதறினாலும் ஒரு சொட்டு தண்ணீர் தராத கர்நாடக அரசு. என்னைப் பொறுத்தவரையில் ஜெ. நம்பிக்கைக்குரியவர் அவரை குறைத்து மதிப்பிட முடியாது.

மிகப்பெரிய விருட்சங்கள் திமுக, அதிமுக கட்சிகள். இந்த இரண்டு பெரிய அணியையும் வீழ்த்தி ஆட்சியில் அமரும் ஆற்றல் யாருக்கு இருக்கு?

2026 இல் அந்திமழையில் பார்ப்போம், அரியணையை யார் அலங்கரிக்கிறார்கள் என்று.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

பரிவு காட்டல்

முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் என்று விஎஸ் நடராஜன் தந்துள்ள கட்டுரை 78 வயதாகும் என் போன்ற முதியோரிடம் பரிவு காட்டி பண்போடு எச்சரிப்பது போல் அமைந்துள்ளது அந்திமழை புண்ணியத்தில் பயனுள்ளதாகி விட்டது. பணம், சொத்து இருந்தாலும் கூட குணம், பண்பு இல்லா சுற்றத்தின் மூலம் நிம்மதியற்ற வாழ்வைத் தான் முதியோர்கள் தொடர்கிறார்கள். ஆன்லைன் மோசடியிலிருந்து தப்புவிக்க கூறிய யோசனை பயனுள்ளது.

ஆர்ஜிபாலன், மணலிவிளை

மக்கள் ஆதரவு

இயக்குநர் பாலாவின் திரைப்பயணத்தை கச்சிதமாகக் கொடுத்துள்ளார் மிஸ்டர் முள். ‘எதுவும் இன்னும் முடிந்துவிடவில்லை. இப்போதிருந்தே கூட தொடங்கலாம்’ என பாலாவை உசுப்பிவிட்ட விதம் சிறப்பு.

தேனிசை செல்லப்பாவை மீண்டும் அசைபோட வைத்தது கவிதா பாரதியின் பெருவழிப்பாதை. வெற்றியழகன் குகேஷ்! கட்டுரையில் ‘கிரிக்கெட் அல்லாத பிற விளையாட்டுகளுக்கும் இது போன்ற அமைப்புகளின் உதவிகள் தேவை’ என்று கோரிக்கை வைத்திருப்பது முக்கியமானது. அரசியல், சினிமா தொடர்பான கட்டுரைகள் செறிவாக எழுதப்பட்டுள்ளன. வடிவேலு தொடர்பாக பாஸ்கர் சக்தியின் கட்டுரை அட்டகாசம்.

சிவா, வடபழனி