பிப்.26 இதழில் வெளிவந்த "முருகன் போர்" கவிதையில் சங்கத்தமிழ் நூற்களில் காணப்படும் அரிய கருத்துக்களை, கவிஞர் அறிவுமதி எளிதாக சொல்லிச் செல்கிறார். கவிதையும் சரி... அதற்கான கம்பீரமான ஓவியமும் சரி... இதயத்தை மயிலிறகால் வருடிச் சென்றன!
திசையாற்றுப்படை கட்டுரையில் பிரபாகர் அவர்கள், சினிமா படப்பிடிப்பு தளங்களில் காணப்படும் காட்சிகளைத் தெளிவாக... விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு வந்த பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள் அருமை!
நாமே சென்னை புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்ட அனுபவம் கிடைத்தது.
பெயரில் என்ன இருக்கிறது ?... 60 ஆண்டுகளுக்கு முன் வரை தங்கள் ஜாதிப்பெயரை பெருமையாகச் சேர்த்துக்கொண்டிருந்த தமிழகம்... இன்று அந்த மாதிரி ஜாதிப் பெயரைச் சூடுவதை நினைக்கவே மனமில்லாத நிலையில் தமிழகம் மாறியிருக்கிறதே!
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை
ஏற்பு
முனைவர் சங்கர சரவணனின் ‘நாகரிகங்களுக்கு இடையேயான உரையாடல்’ என்ற கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். தமிழ் நவீன படைப்புகளை பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருக்கும் பேராசிரியை லெட்டிஸியா இபனேஸின் நேர்த்தியான இலக்கிய நேர்காணலைப் பதிவு செய்து, அந்திமழை வாசகர்களுக்கு அளித்திருப்பது சிறப்பு.
மேலும் சிறப்புப் பக்கங்கள் பகுதியில் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்வதற்கு எதிராக 1929 இல் தொடங்கிய அறைகூவல் இன்று நூற்றாண்டை எட்ட இருக்கும் நிலையில், ‘சுத்தமாக ஒழிந்துவிட்டதா?’ என்னும் கேள்வியை எழுப்பி, பல்வேறு பணிகளில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் பென்னேசன, வீ.சு.ஜோதிலட்சுமி, வழக்கறிஞர் சு.குமாரதேவன், கருந்தேள் ராஜேஷ், நியாண்டர் செல்வன், பழ. அதியமான் ஆகிய ஆளுமைகளின் கருத்துகள் சுவை நிரம்பியதாய் இருந்தன. பெயரில் மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் ஜாதியை நாம் ஒழிக்க முயல்வது நல்லது என்ற பழ. அதியமானின் கருத்து ஏற்கத்தக்கதாகும்.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.
அருமை
ஒடுங்கல் சிறுகதை படிப்பதற்கு அருமையாக இருந்தது. இதை வெளியிட்ட ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
மைதீன், பழனி.
சிறப்பு
முருகன் போர் கவிதை படிப்பதற்குச் சிறப்பாக இருந்தது.
ராஜேஸ்வரி, பல்லடம்.
புரிதல்
டெல்லியுடன் தமிழகம் இணக்கமாக இருந்தால் நிதிப்பகிர்வு சரிவிகிதத்தில் இருக்க உதவி புரியும் என்பதை ஆட்சியில் பங்கு கட்டுரை புரிய வைத்தது.
காசி. யோக அக்ஷயா, கோவை.
நட்பு
நகைச்சுவை இழையோடிய, படித்து ரசிப்பதற்கான ஒரு படைப்பாக அமைந்திருந்தது பிரபாகரின் திரைப்பட அனுபவம். திரைப்படத்தில் பணியாற்ற பல சமாதானங்களுக்கு ஆட்பட நேர்ந்துவிடும் என்பதை உணர்த்தியது சிறப்பு.
ஆர்.கே. அருள்செல்வனின் ஒடுங்கல் சிறுகதை படித்தேன். நட்பு என்பது பேசுவது, சிரிப்பது, அரட்டையடிப்பது, கொறிப்பது, தேநீர் அருந்துவது என்று பொழுது போக்குச் செயலானது என்ற மேலோட்டமான எண்ணமே பலருக்கு இருந்து வருவதையும் உற்றுழி உதவலே உயரிய நட்பு என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாக உணர்த்தியது.
முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்.
பாராட்டு
பிப்ரவரி இதழ் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பளிச்சென பரந்துபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக ஆட்சியில் பங்கு பதிவில் விஜய் இத்தேர்தலில் மிகப்பெரிய சீர்குலைப்பாளராக இருப்பார் என்கிற எதார்த்தத்தையும், இதனால் இரு கழகங்களும் தனிப்பெரும்பான்மை பெருவது பற்றி ஒரு நம்பிக்கைக்கு வர இயலாத நிலை இருப்பது நிதர்சனம்.
பாய்லர் பாணி, வேலூர்.
வீரமங்கை
தமிழனுக்கென்று ஒரு கடவுள் முருகன். கையில் ஈட்டியுடன், சேவற்கொடியுடன் ஆனை மீது கம்பீரமாக இருக்கும் வீரன் அவன். தமிழுக்கு ஆபத்து என்றால் எப்படித் தோன்றவேண்டுமோ அப்படித் தோன்றியுள்ளான் முருகன்.
அவள் அவளுக்கானவள் என்ற ஜோதிலட்சுமியின் கட்டுரை யோசிக்க வைத்தது. ஆணுக்கு இணையாக கல்வி வேலை என்று வந்துவிட்டவுடன் திருமணம் ஆனவுடன் சக தோழியாக நடத்த வேண்டியவள் தாலியைக் கட்டி நான் சொல்வதைக் கேக்க வேண்டும் என்ற ஆணாதிக்கம் சன்னமாக உடைகிற சத்தம் சந்தோஷமாக இருக்கிறது.
நவீன தமிழ் இலக்கியங்களை பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்திருக்கும் லெட்டிஸியா இபனேஸ் இலக்கிய பெண் மட்டுமல்ல என் கண்களுக்கு வீரமங்கையாக தெரிகிறார். தமிழ் இலக்கியம் கற்றால் என்றும் இளமையாக இருக்கலாம் என்பதற்கு உதாரணம் லெட்டிஸியா இபனேஸ்.
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
பெருமை
மரபு + நவீனம் தேடி வந்த பத்ம மகுடம் என்ற நேர்காணல் சிறந்த ஆலோசனை ! சித்த மருத்துவ மரபுகளைத் தேடி கால்நடை மருத்துவத்தில் வெற்றிகளைப் பதிவிட்டுள்ள அவருக்கு தரப்பட்டதில் ‘விருது'க்கும் பெருமை தான் !
எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு,
யோசனை
‘ஆட்சியில் பங்கு தமிழகத்தில் சாத்தியமா ?' என்ற அரசியல் தொகுப்பு படித்தேன் . இந்தத் தேர்தலில் 'தவெக'வின் பிரவேசம் தான் இந்தியக் கட்சிகளை மாற்றி யோசிக்க வைத்து விட்டது.
ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்
திணிப்பு
பெயர் பெற்ற சிறப்புப் பக்கங்களை படித்தபோது அதில் எனக்கு வேறு விதமான சிக்கல். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகனோடு படித்த என் அப்பா (இராம அண்ணாமலை), திராவிட தாக்கத்தால் எனக்கு அண்ணா அன்பழகன் என்று பெயர் சூட்டினார். ஆனால் பெயரை சொன்னதுமே நான் திமுகவை சேர்ந்தவன் என்றே பலரும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். உண்மையில் நான் இன்றும் எம்ஜிஆரை ரோல் மாடலாக கொண்டவன். நமது விருப்பமோ, தேர்வோ இல்லாமல் தானே ஜாதி_மதம் போல பெயரும் கூட நம்மீது திணிக்கப்படுகிறது. சில பத்திரிகைகளில் என் பெயருக்காகவே வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதுண்டு. ஆக, இந்த பாதிப்புக்கெல்லாம் பரிகாரமாக ஒரு நல்ல புனைப் பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
பாராட்டு
ஜாதி, மதம், கடவுள் மற்றும் மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் விட்டொழித்தால் தான் மனிதனாக இருக்க முடியும் என்ற கொள்கையில் இந்த மாத இதழ் அமைந்திருக்கிறது. பேராசிரியர் புண்ணியமூர்த்தியின் பத்ம விருது பற்றி சிறப்பு பேட்டி சிறப்பாக இருந்தது. பிரபாகர் கட்டுரை அடுத்து எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. செழியன் போன்றவர்கள் பட உலகில் களம் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது. புத்தக அறிவுதான் ஒருவனை மனிதனாக்குகிறது. எத்தனை புத்தகங்கள் படித்தாலும் மனிதன் மனிதனாக மட்டும் மாறவில்லை. இது சமுதாய அவலம். அந்திமழை இதழ் மனிதனை மனிதனாக உருவாக்க முயற்சிப்பது பாராட்டுக்குரியது.
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்.
பார்க்கிங்
செல்வராஜ் ஜெகதீசனின் பார்க்கிங் சிறுகதை, நவீன நகரங்களில் வாகனப் பெருக்கத்தால் உருவாகி இருக்கும் நெருக்கடியை சுவைபட உணர்த்தியது.
ராமன், காரைக்குடி