கடிதங்கள்

மகுடம்

Staff Writer

அறிவுமதியின் காதல் போர் கவிதை உள்ளத்தை வெகுவாக கொள்ளை கொண்டது. அவரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன். அமெரிக்காவிலும் சாதியா என்னும் திசையாற்றுப்படை கட்டுரையை படித்தேன். இந்தத் தலைமுறையின் இரத்தத்தில் கலந்துவிட்டது. அடுத்த தலைமுறையில்தான் சாதியை ஒழிக்க முடியும். அத்துடன் சாதியும் தானாகவே அழிந்துபோகும். இந்த தலைமுறையில் ஒன்றும் செய்திட இயலாது.

தெய்வத்தை திட்டமிட்டே தவிர்க்கவில்லை என்னும் வைரமுத்துவின் நேர்காணல் அற்புதம். சங்கர சரவணனின் கேள்விகளுக்கு வைரமுத்து அளித்த பதில்கள் நெருப்புத் துண்டுகளாக இருந்தன. காவலரின் கிடுக்குப் பிடி என்ற டி.எஸ்.எஸ். மணியின் கட்டுரை இதழுக்கு மகுடமாக அமைந்திருந்தது.

தங்க. சங்கரபாணி, பொழிச்சலூர்

மனிதாபிமானம்

அரவிந்தனின் நியதி சிறுகதை படித்தேன். பெண் குழந்தையின் முன்னால், பெற்ற தந்தை யாரோ முன்பின் தெரியாத ஒருவனால் அடிவாங்குவதை அக்குழந்தை எப்படி எதிர்கொள்ளும் என்ற சிந்தனையோடு வண்டி ஓட்டுபவனை சமாதானம் கூறி பின்னால் இருப்பவன் அழைத்துச் செல்வதற்கு மனிதாபிமானமன்றி வேறென்ன காரணமிருக்க முடியும்.?

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்.

பாராட்டு

நியதி சிறுகதையின் மூலம் பெற்ற குழந்தையின் முன்னாடி தகப்பன் அடிபடக் கூடாது என்கிற கருத்தை எடுத்து வைத்தது பாராட்டுக்குரியது.

பாய்லர் பாணி, வேலூர்.

சேவை

கவிஞர் அறிவுமதியின் காதல் போர் கவிதையின் வரிகள் எங்களின் இதய அறைகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டது. கெளசர் பெய்க் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது.

கோ. குப்புசாமி, வடபழனி

உண்டு

சொல்வதற்கு சொற்கள் உண்டு!

வெல்வதற்கு வெற்றிகள் உண்டு!

காண்பதற்கு காட்சிகள் உண்டு!

அற்புதங்கள் பற்பல கொண்டு!

ஆற்றுகிறது அந்திமழை அருந்தொண்டு!

லட்சுமிசங்கரன், அம்பாசமுத்திரம்.

தெளிவு

அந்திமழை செப்டம்பர் மாத இதழ் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது. எடப்பாடியின் சுற்றுப்பயணத்தைத் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள். அமெரிக்காவிலும் சாதியா என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை அருமை. நியதி என்ற சிறுகதை இந்தக் காலத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்படியே காட்டுகிறது. வைரமுத்துவின் நேர்காணலில், கடவுள் வேறு, தெய்வம் வேறு என்பதை சரியாக விளக்கியுள்ளார்கள். துபாயில் கெளசர் செயல்பாடுகள் ஒவ்வொரு மனிதனும் இதைக் கடைப்பிடித்தால் இந்த உலகமே பொன்னுலகம் ஆகும்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

உயிரோட்டம்

 ‘இத நான் எதிர்பார்க்கலைங்க…’ -கட்டுரை படித்தேன். சுழல் பந்தில் அசத்திய அஸ்வின் பேட்டிங்கிலும் அசத்தியிருக்கிறார். அவர் தமி்ழர் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இன்னும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஏக்கமாக இருப்பது, அஸ்வினுக்கு இந்திய அணி கேப்டன் பதவி தரப்படவில்லை என்பது.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

வித்தியாசம்

இயக்குநர் அதியன் ஆதிரையின் பேட்டி அருமை. அவரது படத்தைப் போலவே வித்தியாசமாக உள்ளது.

மெனோபாஸ் பற்றிய கட்டுரை அருமை. சிறப்புப் பக்கங்களில் வந்த கட்டுரைகளும் சூப்பர்.

அ. முரளிதரன், மதுரை

சுற்றிவந்தாலும்

தற்போது தேர்தல் வரும் வேலையிலே தமிழகத்தை சுற்றி சுற்றி வந்தாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான் என நிரூபித்துக்கொள்வார் எடப்பாடி!.

காசி யோக அக்‌ஷயா, கோவை

விடை

எடப்பாடி தி பாஸ் ஓகே போட வைத்தது. உள்ளே சுற்றிவந்த எடப்பாடி இணக்கம் காட்டும் பாஜக! நடுநிலை என்று அந்திமழை செய்தியாளர்கள் சேகரித்து அளித்திருப்பது சிறப்பு. மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! என்னும் கோஷம் மக்களை எந்த வகையில் ஈர்த்திருக்கிறது என்பதை தேர்தல் முடிவே சொல்லும்.

இங்கே ஊழல், அங்கே ஊழல், ரெய்டு பணம் கட்டுக் கட்டாகப் பிடிபட்டது தீர்வு எங்கே? மக்கள் கேட்கிறார்கள்! விடை மக்கள்தான் எழுத வேண்டும்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

மெய் சிலிர்ப்பு

நற்றிணையை முன்னிறுத்தி உலகப்போரை உசுப்பிவிடும் அறமற்ற அரசுக் கட்டில்களை உடைக்கும் நாள் எப்போதென்று உலக அறமன்றத்திடம் கேட்பீர் என்று வாசகர்களைக் கேட்க வைக்கும் கவிஞர் அறிவுமதி அவர்களின் கவிதை அற்புதம்.

கௌசர்பெய்க் ஆற்றிவரும் ஈடுஇணையற்ற தொண்டினை வாசித்து மெய்சிலிர்த்து நின்றேன். தமிழக அரசு அவரை அழைத்து பாராட்ட வேண்டும் என்பதே என் ஆசை.

பாவலர் கருமலைப் பழம் நீ சென்னை 39

பரவட்டும் உரை

வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்பது புத்தகத்தின் தலைப்பு, வள்ளுவனார் மறைக்கு வைரமுத்தார் உரை என்பதால் தமிழ்கூறும் நல்லுலகில் தவிப்பு. உரைக்குள்ளே ஏதுமில்லை குறை, திறந்தால் எல்லாமே நிறை. கடவுள் கருத்துக்கு திரை, தெய்வத்துக்கு முறை. பெண்ணியத்துக்குக் கொட்டியிருக்கிறது பறை, கண்ணியத்துக்கு கட்டப்பட்டிருக்கிறது கரை, திக்கெட்டும் பரவட்டும் உரை.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை - 630 311.

உணர்வோமா?

அமெரிக்காவிலும் சாதியா! கட்டுரை அதிர்ச்சியளித்தது. எவ்வளவு முன்னேறினாலும் சாதி என்ற பிரிவினையையும் இழுத்துக் கொண்டு செல்வது அறிவுக்கு உகந்ததல்ல. எதற்கும் பிரயோஜனப்படாத சாதியை துறப்பதே சமுதாய வளர்ச்சிக்கு அஸ்திவாரமாகும் என்பதை இனியாவது உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துவோமா?

 அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.

பரவட்டும் உரை

எத்தனை உரை எழுதினாலும் புத்தம்புது பொருள் தரும் நீதி நூல் திருக்குறள் என்பதை வைரமுத்துவின் நேர்காணல் மீண்டும் நிரூபித்தது.

அ.யாழினிபர்வதம் சென்னை.

தாக்கம்

சிறப்புப் பக்கங்களில் அழகிய பெரியவனின் கட்டுரை படித்தேன். கொஞ்சம் நானும் அதே நிலையைக் கடந்து வந்துள்ளேன். ஆனால் கடைசியில் பாசிட்டிவ் ஆனது எனக்கு. கலாப்ரியாவின் கட்டுரை என்னை கொஞ்சம் தாக்கிவிட்டது. த.பிச்சாண்டி பக்கமும் எனக்கு தாக்கம் ஏற்படுத்தியது. கடைசியாக கௌசர் பெய்க் தாக்கம் மிகுதியாக என்னுள்ளே...

ந.மனோகரன், சிங்கை, கோவை

விந்தை

‘நற்றிணை' யின் நான்கு வரிக்கு இத்துணை நெடிய உரை தந்து, படிப்போரை ‘உசுப்பிவிட்டு', ஆள்வோரை கொண்டு, உலக அறமன்றத்தில் குரலெழுப்பி உலகப்போரை நிறுத்திவிட்டு, சமாதானம் நிறுவ தூண்டிடும், வித்தையாக... ஒரு விந்தைக்கவிதை அறிவுமதியின் ‘காதல் போர்'.

ந.செளந்தரராசன், சென்னை 91

வியப்பு

'சுற்றி வந்த எடப்பாடி! இணக்கம் காட்டும் பாஜக!' என்று தொகுத்துள்ள அரசியல் தொகுப்பு அதிமுகவினருக்கே வியப்பு தான்!

மருதூர் மணிமாறன், இடையன்குடி

நிம்மதி

"காதல் போர்" கவிதை வரிகளில் விழிகள் கலந்தன! புவிப்போரில்கூட அரசுக் கட்டில்களை உடைக்கிற நோக்கில் கட்டிப் புரண்டு கட்டிலை உடைக்கும் போர்தனை தாபத்தோடு புகுத்தி கவித்தாகம் தணித்த அறிவுமதி அருளியது நிம்மதி!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு

அட்டை ஓவியம்: சந்தோஷ் நாராயணன்