கடிதங்கள்

சுவையோ சுவை!

Staff Writer

அரசியல் விமர்சகர் ப்ரியன் அவர்களின் இனி அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? முழுமையான

ஆய்வுக்கட்டுரையில் நிறையத் தகவல்கள். எத்தனைப்பேர் நாடாளுமன்றம் சென்றாலும் வறியவர்களின் வாழ்க்கை அப்படியேதானே இருக்கிறது. வளமும் நலமும் பெரும்பாலோருக்கு வாய்க்கவில்லையே! வருமானம் பெருகவில்லையே! வளர்ச்சியின்றி வாரிசுகளை உருவாக்கினால் வறுமை மேலும் வளராதா? வறுமை குறையவும் வசதி பெருகவும் ஆட்சியாளர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? மறுசீரமைப்பு அமையுமாயின் இந்தி பேசுவதாகக் கூறப்படும் மாநிலங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ஒரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்போ அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவாகவே சாத்தியம் இருக்கிறது. இவ்வாறான நிலைப்பாட்டால் தென்னிந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்… என்ற கட்டுரையாளரின் கருத்து கவனிக்கத்தக்கதே! தமிழகத்தின் பாரம்பரிய இனிப்புக் கடைகளின் இன்னொரு பக்கத்தை புரட்டி, தலைமுறைகளைத் தாண்டிய உழைப்பைச் சுவையோடு சொல்லியிருக்கும் சிறப்புப்பக்கங்கள் சுவையோ சுவை!

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

வாஞ்சை

நவம்பர் மாத அந்திமழை இதழின் சிறப்புப் பக்கங்களில் ஸ்வீட் மேலே ஸ்வீட்டு என்ற இனிப்புக் கடைகளின் வெற்றிக்கதைகளை வாசகர்களுக்கு ‘வாஞ்சை’ யோடு பரிமாறிய விதம் சூப்பரோ சூப்பர்…!

கா. சித்ராகாமராஜ், கோவை

சரியானதே!

கவிதா பாரதியின் ‘கடவுளின் பெயரால் சமூகநீதியை வலியுறுத்துபவர்’ கட்டுரை படித்தேன். வாழ்வை மேம்படுத்தக்கூடிய வாழ்வியல் பயன் தரத்தக்க செய்திகளை, கருத்துகளை, நிகழ்வுகளைத் தக்க முறையில் மேடைப்பேச்சில் எடுத்துக் கூறும் திறம் வார்ந்தவர் சுகி சிவம். சமூகத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கின்ற நற்பணியைத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரைப் போல இவர் செய்கிறார் என்ற கட்டுரை ஆசிரியரின் கருத்து சரியானதே என்பதால் ஏற்கத்தக்கதே. பகுத்தறியும் திறத்தோடு அறிந்து உணர்ந்து தெளிந்ததை நேர்மையாகவும் துணிச்சலாகவும் பிரகடனப்படுத்துபவராகவும் சுகி சிவம் விளங்குவதை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டியது கட்டுரை.

பாவலர் மேலை தமிழ்குமரன், திருச்சி

மெய் நிகழ்வு!

தன் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் மேலதிகாரிகளுக்கு வால் பிடிக்கவும் காக்காய் பிடிக்கவும் அவர்களது தேவைகளை நிறைவேற்று வதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு பணியகத்திலும், ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதைப் போல அவர்களை யாராலும் திருத்தவும் முடியாது. திருந்தவும் மாட்டார்கள். அவர்கள் இவருக்கு வேண்டியவற்றை கொஞ்சமும் கூச்சமோ குற்றவுணர்வோ இன்றி மேலதிகாரிகளின் தயவுடன் சாதித்துக் கொள்கிறார்கள் என்ற மெய் நிகழ்வை ‘நடக்காதென்பார் நடந்துவிடும்’ என்ற தலைப்பில் சிறந்த சிறுகதை ஆக்கியிருந்தார் உஷாதீபன்.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

வீணாக்கி விட்டீர்களே?

அந்தச் சிவப்பு பட்டன் எங்க இருக்கு? என்னும் திண்டுக்கல் லியோனியின் எழுத்தோவியம் அருமை! கடவுளின் பெயரால் சமூக நீதியை வலியுறுத்துபவர் என்னும் கவிதா பாரதியின் கட்டுரை உண்மையில் அற்புதம். சுகிசிவத்தைப் பற்றி தெரியாத பல செய்திகள் தெரியவந்தன. இந்த இதழ் இனிப்புச் சிறப்பு இதழாக வெளிவந்துள்ளது. இனிப்பு உடலுக்குக் கேடு. இதுபோன்ற உடலுக்குக் கேடு பயக்கும் பொருட்களுக்குச் சிறப்பிதழா? இனிப்புச் செய்திகளை வெளியிட்டுப் பக்கங்களை வீணாக்கிவிட்டீர்கள். மக்களில் பெரும்பாலோர் நீரிழிவு நோயாளிகள். இந்த இனிப்புச் சிறப்பிதழ் மேலும் அவர்களின் நோயை அதிகப்படுத்தும். காதம்பரியின் திரைவலம் நன்றாக இருந்தது. இனி உடலுக்கு நன்மை சேர்க்கும் செய்திகளை வெளியிடுங்கள்.

தங்க. சங்கரபாண்டியன், சென்னை

முன்னேறிய கதை!

இந்த இதழ் காலத்திற்கேற்ப தீபாவளியை ஒட்டி இனிப்புக் கடைகளைப் பற்றி கதை ரொம்ப சுவாரஸ்யம். நாட்டின் சனத்தொகை குறைவதை சுட்டிக்காட்டிக் கணக்கெடுப்பு தேவை. பிரபாகர் கட்டுரை எப்போதும் சிறப்பாக இருக்கும். சுகி சிவம் மனிதனைக் கெடுப்பது மதமும் சாதியும் என்பதை துணிந்து சொன்ன ஆன்மீகவாதி மனிதர்களை சிந்திக்க வைப்பதில் ஒருவித்தியாசமான பேச்சாளர். மனிதகுல மேம்பாட்டிற்கு ஆன்மிகத்தைப் பேசுவது பாராட்டிற்குரியது. ஒவ்வொருவரும் ஸ்வீட் ஸ்டால் அமைத்து முன்னேறிய கதையைப் பதிவு செய்துள்ளீர்கள். கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் சிங் வகுப்பைச் சேர்ந்தவர்கள் செய்த அல்வா சாப்பிட்டிருக்கிறேன். அதன் பாரம்பரியம் கேரளா வரை எட்டியுள்ளது. தரமான பொருளில் செய்தால் என்றும் பெயர் நிலைத்திருக்கும். அந்திமழை கால நேரம் அறிந்து தன்செயல்பாட்டை நடத்துகிறது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

தொடரட்டும்!

எந்த ஒரு வணிகத்தையும் முதலில் அறிமுகம் செய்து விற்பனை செய்வதற்கு மிகவும் மன தைரியம் வேண்டும் என்பதன் உதாரணமாக, வெறும் கடலை மாவுடன் பூண்டு மிளகு, சீரகம் இன்னும் இவைகளுடனும் கடலை எண்ணெய் கொண்டு ஒரு ஸ்நாக்ஸ் தயாரித்து விற்பனை செய்தால் என்று சாத்தூர் சண்முக நாடார் யோசனை செய்ததன் வெற்றி இன்று சாத்தூர் மட்டுமின்றி தமிழ் நாட்டில் பல ஊர்களில் மிகப் பெரிய வணிகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு என நூற்றாண்டினைத் தாண்டி தொடரும் வெற்றி தொடரட்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அத்தனையும் முத்துக்கள்!

பெருவழிப் பாதையில் சுகி சிவம் குறித்து கவிதா பாரதி எழுதியிருந்த கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். 'கும்பிடறேங்கோ' கதை மூலம் அவர் சொல்ல வந்த பகுத்தறிவு கதை மிக நேர்த்தி. வாழ்வியலோடு இயைந்த கருத்துக்களைக் அவர் தமது தத்துவ விளக்கங்களில் சொல்லிய நயம் பாராட்டுக்குரியது.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை

இனிய இம்சை

அந்திமழை நவம்பர் :சிறப்பு பக்கங்கள், இனிப்பு நோய் உள்ளவர்களுக்கு, இன்ப இம்சை தான், இனிப்பில் வாழ்பவன்- பா. ராகவன் இனிய நடை, அந்த இடங்களுக்கு நம்மை நேரடியாக அழைத்து சென்று இனிப்புகளைச் சுவைக்க வைத்தது, முத்துக்கிருஷ்ணன் தமிழக அனைத்து இனிப்பு வகைகளையும், பட்டியல் இட்டு படம் பிடித்து காட்டி விட்டார்.

வலம்புரி நாகராஜன், ஈரோடு

என்னவாகும்?

இனி அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?’ என்ற அரசியல் தொகுப்பு ‘ப்ரியன்’ புண்ணியத்தில் மிகக் கண்ணியமாகத் தரப்பட்டுள்ளது. ஆந்திரமுதல்வர் சந்திரபாபு சமீபத்தில் கூறிய கருத்தும், தொடர்ந்து தமிழக முதல்வர் கூறிய கருத்தும், இணைந்து கருக்கொண்ட கட்டுரை என்பதால் ஜனரஞ்சகமான தொகுப்பாகிவிட்டது. குறிப்பிட்ட காலத்தில் கொரோனா குறுக்கீட்டால் மக்கள் தொகைக்கணக்கீடு முடியாது போனது. மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டும் கட்சிகள் கூட தொகுதி எண்ணிக்கை விசயத்தில் மௌனமாகிவிடுவதால் மகளிர் மசோதா படும்பாடுதான் இதுவும் படும் என்று எனக்குப்படுகிறது.

ஆர்.விநாயகராமன், 46, செல்வமருதூர்

மனம் குளிரும்!

சொற்பொழிவில் பரிமாறப்படும் சுகி சிவத்தின் கருத்துக்களில் சமுகநீதி ஒளிரும்! வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற பாரதத்தின் அடிப்படைத் தத்துவத்தின் கோட்டில் பயணிக்கும் அவரது கருத்துக்களைக் கேட்கும் போதும், படிக்கும் போதும் என் போன்றோர் மனம் குளிரும்!

மருதூர் மணிமாறன் இடையன்குடி

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram