வாசிப்பு திருவிழா நடத்தி வாசகர்களைக் கொண்டாட வைத்திருப்பது சிறப்பு! அவ்வளவு கதைகளும் அபாரம்! அழகிய சிங்கர், அசோகமித்திரன் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு சிறப்புப் பரிசு பெற்ற அவரின் சுவர் கதை படித்து மகிழ்ந்தேன். பத்மநாபன் – மல்லிகா இணையரின் வாழ்க்கை மிக இயல்பாக, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. துணைவி தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதையும், துணைவர் எழுத்திலும் இலக்கியத்திலும் ஈடுபடுத்திக் கொண்டு இயங்குவதையும் எழுத்தாளர் அசோகமித்திரனிடம் தனது இல்லற வாழ்க்கை, எழுத்துப்பணிகள் சார்ந்து உசாவுவதையும் இலக்கிய நயத்தோடு எழுதி இனிமை சேர்த்திருக்கிறார் கதாசிரியர். துணைவி மல்லிகா சற்றே உடல் நலமின்றி இருக்கும்போது கணவர் பத்மநாபன் கரிசனம் காட்டும் அந்த சூழல் சுவாரசியம் மிக்கது. மல்லிகா இப்ப சரியாய் போய்விட்டதா? என்பதும் பழையபடி அவள் மாறிவிட்டாள் என்று சந்தோஷிப்பதும் இப்போது அவர்கள் முன் சுவர் நிற்கவில்லை என்று நிறைவு செய்திருப்பதும் யதார்த்தம்! சூப்பர் சார்.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
அழகான சிறுகதை
முதல் பரிசுக் கதையான எஸ். பர்வீன் பானுவின் ஆழி சேர காத்திருக்கும் நதிகள் படித்தேன். ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தம் வாழ்வில் யாருக்காவது பயன்படுவதற்கு பிறகுக்கு ஆறுதல், ஆதரவு போன்ற உதவிகளைச் செய்து கொண்டேதான் இருக்க வேண்டுமென்ற வாழ்க்கைத் தத்துவத்தை பதாகையாக உயர்த்திப் பிடிக்கின்ற கதையாக உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு ஆளாக்கும் ஆழமான அழகான சிறுகதையாக அமைந்திருந்தது.
கதையில் கையாளப் பெற்றிருக்கும் சில சொற்கள், சில சொற்றொடர்கள், சில வரிகள், சில கருத்துகள் தேனில் நனைத்தெடுத்த பலாச் சுவையாக இனித்தன. ஏழை இலங்கை அகதிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது, இருக்கின்றது என்பதை உணர்வுப்பூர்வமாக அறிய விரும்புகின்ற அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான கதை.
எல்லாமே இதிலிருக்கிறது என்று எல்லோரையும் சொல்ல வைக்கும் ஒரு கதையாக இருப்பது மிகச்சிறப்பு.
கதைக்கு மிகப் பொருத்தமான ஆழமான தலைப்பு. அருமையான முத்தாய்ப்போடு கூடிய முடிவு. வெகு காலம் வரை எளிதில் மறக்க முடியாத சிறுகதை. பாராட்டுகள்.
முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்
பாராட்டுகள்
ஆழி சேர காத்திருக்கும் நதிகள் சிறுகதை சூப்பராக இருந்தது. இதை வெளியிட்ட ஆசிரியருக்குப் பாராட்டுகள்!
பரமேஸ்வரி பெருமாள், புதூர் பழனி
கண்முன்னே
ஆழி சேர காத்திருக்கும் நதிகள் உயர்வான சிறுகதை. இரண்டு பெண்களின் மனதில் ஏற்படும் போராட்டங்களை கண்முன் நிறுத்தினார் எஸ். பர்வீன் பானு.
கடல் எவ்வளவு துயரங்களை சுமந்து நிற்கிறது. கடற்கரையில் ஒரு பெண் சோனா தனித்து நிற்கும்போது நேசக்கரம் நீட்டும் மாதேம்மை மருது ஓவியம் மூலம் கண்முன் நிற்கிறார். காவல் பாதிக்கப்படும் பெண் மீது குற்றம் சாட்டப்படும் அவலம் தொடராமல் உரிமைக் குரல் தோழமையுடன் எழுப்பியிருப்பது நாங்கள் இருக்கிறோ எங்களைப் பார்த்துக் கொள்வோம். பெண்ணிற்கு பெண் தானே பாதுகாப்பு. ஓர் ஏதிலியின் துயரம் ஓர் ஏதிலிக்குத்தான் தெரியும். மனித வாழ்வை நம்பிக்கை தளராமல் உணர்வூப் பூர்வமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர். கதை முழுவதும் மாதேம்மையின் உறவுகள் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைந்திருக்கிறது. புலம் பெயர்ந்தவர்களின் துயரம் புலம் பெயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். என்னை அம்மா என்று கூப்பிடேன் என்று மாதேம்மை சொல்லும்போது சோனாவுடன் சேர்ந்து நாமும் அம்மா என்று கூப்பிடுகிறோம் அந்திமழை கதையை படித்துவிட்டு. ஊட்டுங்கன்னு கதையும் படித்தேன். எத்தனை செல்வம் இருந்தாலும் தாயில்லாத குழந்தைகளுக்கு தாயாக இருப்பது பசுமாடுதான். மாடு வளர்ப்பின் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்தார் சூரிய மூர்த்தி. மறக்க முடியாத கதை மாடுகள் குறித்த கதை. ஆமாம்… நம்முடைய நாட்டு இன மாடுகள் என்னவாயிற்று.?
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
குறையுங்கள்!
சிறுகதை சிறப்பிதழ் சிறப்பாக இருந்தது. பரிசு பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். ஒவ்வொரு சிறுகதை ஆசிரியரையும் அறிமுகப்படுத்திய விதம் வெகு சிறப்பு. அந்திமழை கவிதைகளை வெளியிடுவதில்லை. சிறப்பு. சிறுகதைகளையும் வரவர குறைத்து நிறைய அறிவுப்பூர்வமான ஆழமான கட்டுரைகளை வெளியிடுங்கள். அந்திமழையின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பொன்னேடு. இதழ்தோறும் கருத்து கருவூலமாக, அறிவு பெட்டகமாக, சிந்தனை புதையலாக ஒவ்வொரு இதழையும் தரமான – சுவையான இதழாகக் கொண்டு வாருங்கள்.
தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்
நானும்
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு எழுத்தாளர்களை உருவாக்கும் நல்ல எண்ணம் கொண்டது. நானும் எழுதி அனுப்பியிருந்தேன். தலைப்பு, சொந்தம் ஒரு சுகமா என்ற தலைப்பில். ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என நினைத்தேன். சோர்வடையவில்லை. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
வாழ்த்துகள் பல
வாசிப்பை நேசிப்பவர்களுக்கு ஆக்ஸிஜனை அள்ளி அள்ளி வழங்கியது போல் நவரச கதைகளை நளினமான ஓவியத்தோடு எங்களுக்கு வழங்கிய வாசகர்களுக்கும் கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள் பற்பல!
காசி. யோக அக்ஷயா, கோவை
ஓவியக் காட்சி
கடந்த இதழில் வெளியான சிறுகதைகளுக்கு சித்திரக் கதை பாணியில் படங்களை வரைந்திருந்தது மிக அருமையாகவும் புதுமையாகவும் இருந்தது. கதைகளைத் தாண்டி அந்த ஓவியங்களே தனித்து நிற்கத் தகுந்தவையாக இருந்தன. அதுவும் அசோகமித்ரன் பஜ்ஜி சாப்பிடும் சித்திரப் படங்களை ரவிபேலட் மிக அருமையாக வரைந்திருந்தார். மருது, ஜீவா, ஜெயா, ராஜன் எல்லோரும் தங்கள் பாணியில் ஒரு ஓவிய கண்காட்சியையே நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்.
கி.செந்தில்குமார், பெரியார் நகர், சென்னை
முதல்வரிசை
போட்டி வைப்பதிலும், தேர்வு செய்வதிலும், முடிவுகள் வெளியிடுவதில், அதை முற்றாகப் பிரசுரிப்பதிலும், எல்லா வகையிலும் நல்லா இருக்கு அந்திமழைன்னு ஒரு அர்ச்சனையே பண்ணலாம்! அல்லது கர்ஜனையோடு கோசமும் போடலாம்! அந்தி மழை முதல் வரிசையில் இடம் பெரும்!
மருதூர் மணிமாறன் இடையன்குடி
சுவாரசியம்
அழகியசிங்கரின் சுவர் சிறுகதையில் அசோகமித்திரனை ஒரு கதாபாத்திரமாகச் சந்தித்தது, ஆனந்த ஆச்சரியம். அவருக்கு பிடித்த மிளகாய் பஜ்ஜியை மே.மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில்தான் வாங்க வேண்டுமென்பதையும் சொல்லியிருக்கலாம். கதையின் ஹீரோ பத்மநாபன் என்று இருக்கிறது. ஆனால் ஓவியத்தில் அழகிய சிங்கர் தோன்றுகிறார். ஒருவேளை, அசோகமித்திரனின் சொந்த பெயர் தியாகராஜன் என்பதுபோல அழகிய சிங்கரின் நிஜ பெயர் பத்மநாபனோ! கூடவே, அந்திமழை சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதையில், சிறுகதை போட்டிகளைப் பற்றி அலசியது கூடுதல் சுவாரசியம்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
உச்சம்
திரை வலம் பகுதி வழக்கமான சுவாரஸ்யக் கொடியை உயரே பறக்க விட்டு மேலும் உச்சம் தொட வைக்கிறது. 'ரெட்ரோ' வின் கதா பாத்திர ஈர்ப்பு ஷார்ப்பு என்றாலும் நிறைய விசயங்களை சுருக்கிச் சொல்வதில் சற்று சறுக்கும் அது 'ரெட்' ரோவாகிறது! 'டூரிஸ்ட்ஃபேமிலி'யின் போக்கை பேப்பர் கப் காபியோடு சுட்டியிருப்பது பெர்ஃபக்ட்!
'ஜோரா கையை தட்டுங்க' சறுக்கல் ஆகிட, டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'
ஸ்பூஃ ப் காட்சிகளே உப்பு என்பதால் தப்பியுள்ளது + 'மாமன்' கூட காமன் தான்! சூரியின் பரோட்டா லெவல் பூரியாகி விட்டது!
எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு