கடிதங்கள்

கண்ணீரை நிறுத்தமுடியவில்லை!

Staff Writer

ஆகஸ்ட் மாத இதழில் இயக்குநர் பாக்யராஜ் ஜானகியம்மா, இலக்கியவாதி பூமணி அய்யா அஞ்சலி கட்டுரைகள் சிறப்பு. ரமேஷ் வைத்யா எழுதிய கட்டுரை மனதைப் பாதித்தது.

இவற்றைவிட கவிதா பாரதி எழுதிய பெருவழிப்பாதைப் பகுதியில் ‘இங்கே ஒரு டங்கல்’ கட்டுரையில் இடம்பெற்ற மதிப்பிற்குரிய முருகேசன், கிருத்திகா, துளசிமதி என்னை கலவரப்படுத்திவிட்டனர். முழுமையாக படிக்க முடியாமல் மூன்று முறை பிரித்துப் பிரித்து படித்தேன். அந்த அளவு கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அந்த சாதனையாளர்களை வாழ்த்த மனம் ஏங்குகிறது. இதைப் பதிவிடும் இந்நிலையிலும் கூட கண்ணீரை அடக்க முடியவில்லை. முருகேசன் அவர்களை அழைத்து வாழ்த்துச் சொன்னால்தான் திருப்தியடைவேன். இந்தச் சிறப்பான இதழுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ந.மனோகரன், கோவை

விளக்கு

திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ் பற்றிய ஆளுமைமிக்க பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி வழங்கிய சிலாகிப்பு உரை குன்றிலிட்ட விளக்காக மிளிர்ந்தது!

கா.சித்ரா காமராஜ், கோவை

விருந்து

கே.பாக்யராஜ், பூமணி, எஸ். ஜானகி பற்றிய நினைவுக் கட்டுரைகள் அவர்களின் உன்னதங்களை உணர வைத்தது. ஒவ்வோர் இதழிலும் வெளியாகும், அரசியல், சினிமா சார்ந்த கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாகவே அமைகின்றன.

கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

மகிழ்ச்சி

ஆகஸ்ட் அந்திமழையில் சிறப்புப்பக்கங்கள் சிறப்பானது. “காயம்பட்ட புலி ஆபத்தானது.” 1992ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்நிய மண்ணில் அசத்தலாக விளையாடி உலகக்கோப்பையுடன் காட்சிதரும் இம்ரான்கான், அந்நிய மண்ணில் போராடி இந்திய ரசிகர்களின் இதயத்திலும் இடம்பிடித்தார்.

பவுலிங் என்றால் பாகிஸ்தான், பேட்டிங் என்றால் இந்தியா. 1983-ல் கபில்தேவ் உலகக்கோப்பையை பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, 1992-இல் இம்ரான்கான் உலகக்கோப்பையை பெற்றபோது அதே மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னாளில், அவர் பாகிஸ்தானின் பிரதமர்.

எஸ். பஞ்சலிங்கம், திருப்பூர்.

அருமை

பாக்யராஜ் பற்றிய லியோனியின் கட்டுரை, அருமை! காற்றில் உங்கள் கீதம், ஜானகியைப் பற்றிய கட்டுரை, அவரது குரலைப் போலவே, அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது! கதை விடாதே! மேலே வானம் மட்டுமே கவிதை சூப்பர் எனில், அதற்கான படமோ டபுள் சூப்பர்.

அ.முரளிதரன், மதுரை.

புதுமை

கரிசல் இலக்கியத்தி்ல் கி.ரா.விற்கு சரிநிகராக வலம் வந்தவர் பூமணி. அஞ்ஞாடி நாவலுக்கு அவர் சாகித்ய விருது வாங்குவதற்கு முன்பே எங்கள் ஜீவா படிப்பகம் மூலமாக சிறந்த நாவல் விருது கொடுத்துவிட்டோம்.

நான் அஞ்ஞாடி நாவலை ஐம்பது பிரதிகளாவது விற்றிருப்பேன். ஜானகி அம்மாளின் பாடல்கள் பற்றி பிரபாகர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்கள்.

சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தன் சம்பளத்தில் இப்படியே வாழ்ந்தால் லஞ்சத்திற்கு வழியே கிடையாது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்.

தனித்தன்மை

உதய சங்கரின் ‘கரிசல் இலக்கியத்தின் கதாநாயகன்’ அஞ்சலிக்கட்டுரை மட்டுமல்ல, பூமணியின் படைப்புலகத்தை அங்குல அங்குலமாக ஆய்ந்து, அர்ப்பணிப்பு உணர்வோடு எழுதிச் சிறப்பித்திருக்கிறார் உதயசங்கர்.

‘உச்சரிப்பு சுத்தத்தோடு கச்சிதமான உணர்வும், உயிரும் ததும்பும் பாடல்களைத் தந்து சிறப்பித்தவர், இசையின் ஆதாரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிட்டார்’ எனும் உயிர்ப்பான நடையழகில் ‘காற்றில் உந்தன் கீதம்’ கட்டுரைவழி ஜானகியின் இசையுலக தனித்தன்மையை, கட்டுரையாக வடித்துக் காட்டிவிட்டார் திசையாற்றுப்படையில் இரா. பிரபாகர். அராத்து எழுதிய ‘இது தான்டா கம்பேக்’, வாழ்க்கை நம்மை விடாமல் அடித்தாலும், எந்த அதள பாதாளத்திற்கு தள்ளினாலும், நாம் கொஞ்சம் கேப் விட்டு அடித்தால் நொறுக்கி எடுத்துவிடலாம் என்று அமிதாப் வீழ்ந்து எழுந்த கதை சுவாரஸ்யம் குறையாமல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

‘விட்ட இடத்தில் பொருந்திக் கொள்ளுதல்’ கட்டுரையை விட்டுவிடாதீர்கள் நண்பர்களே! அவசியம் வாசிக்கவும்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

மீள் வரவுகள்!

தமிழ்நாடு அரசியலில் 'மீள் வரவு' அல்லது 'மீட்சி' (கம்பேக்) அலசல் கட்டுரை படு ஹாட். தமிழக அரசியலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நீங்கலாக மற்ற அனைத்து தலைவர்களும் எதிர்பார்க்க முடியாத அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளார்கள். கலைஞர் கருணாநிதி உட்பட. ஆனாலும் மனம் தளராத கலைஞர் கொடுத்த கம்பேக் என்பது தமிழக வரலாற்றில் இனி யாரும் நிகழ்த்த முடியாதது என்றே தோன்றுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் அமர்ந்த ஒரே எதிர்க்கட்சி என்ற மகா பெருமையும் திமுகவுக்கு உள்ளது. கலைஞர் காத்திருந்தது 13 ஆண்டுகள் என்றால் ஸ்டாலின் காத்திருந்தது 10 ஆண்டுகள்.

கரு. பாலகிருஷ்ணன், பெரியகாரை

உத்வேகம்

போட்டிகள் நிறைந்த உலகில் சிலருக்கு தொடர் தோல்விகள் தவிர்க்க இயலாதவையாகிவிட்டன. இளைய தலைமுறையினர் சிலர், இதிலிருந்து மீண்டு வருவதற்கு பதிலாக, இனி மீள்வதற்கு வாய்ப்பில்லை என மன அழுத்ததிற்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகளைப் பார்க்கிறோம். இக்காலகட்டத்தில் "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" சிறப்பிதழ் மூலம் தோல்விகளால் விரத்தியுற்று துவண்டு கிடக்கும் இளைய தலைமுறையினருக்கு உற்சாகமூட்டி உத்வேகப் படுத்தி இருக்கிறீர்கள்.

இரா. சாந்தகுமார், கூடுவாஞ்சேரி

பகட்டில்லாத பகிர்வுகள்

கதைச் சித்தர், திரைக்கதை நாயகன் கே. பாக்யராஜ் குறித்து பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி பகிர்ந்தவை அனைத்தும் பகட்டில்லாத உண்மை முலாம் பூசப்பட்ட வரிகள்!.

ஆர். சூர்யா, கூகலூர்

திருப்தி

'திரைவலம் ' பகுதி செம விறுவிறுப்பு! கமர்ஷியலாக ஓகே ஆகி விட்ட கட்டா குஸ்தி -2ம் , ஒரு டைம் பார்க்கலாம் என்ற என்கரேஜுடன் 'இதயம் முரளி'யும், உணர்ச்சி மயக் காட்சிகள் கூடுதல் என்றிருந்தால் பேசப்பட்டிருக்கும் 'அன்பே டயானா 'வும், சுமார் என்ற கட்டத்துக்குள் நின்று விடும் 'அருள்வான்[ படமும் , இனி திரையில் நடிக்க மாட்டார் விஜய் என்ற தகவலுடன் ‘ஜனநாயகன்' படமும், திரைவலம் பகுதியை திருப்திப் படுத்தின!

ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்

தொடர்கிறது

அந்திமழை மாத இதழ் 14 ஆண்டுகள் கடந்து 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. செப்டம்பர் 2012 இதழில் வெளியான ஆசிரியர் குறிப்பில் ‘அந்திமழையில் எல்லா பக்கங்களையும் பயன்படுத்தக் கூடியவையாக அமைக்க முயற்சி செய்துள்ளோம். சில பக்கங்களை ரசிக்கலாம். சிலவற்றை பத்திரப்படுத்தலாம். சிலவற்றை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து செல்லலாம். ஆனால் எந்தப் பக்கத்தையும் நீங்கள் புறக்கணிக்க இயலாது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.அது இன்று வரை தொடர்கிறது.

லயன்கா.முத்துகிருஷ்ணன், மதுரை-20.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram